search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு - மேட்டூர் அணை நீர் மட்டம் உயர வாய்ப்பு

    கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணை நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
    சேலம்:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் டெல்லியில் நடந்தது. அப்போது காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    மழைக்காலத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. இதற்கிடையே முதல்வர் குமாரசாமியை சந்தித்த கர்நாடக விவசாயிகள் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கரும்பு பயிரிட்டுள்ளதாகவும், அதனை காப்பாற்ற உடனடியாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்தும், மாண்டியா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் குமாரசாமி கூறினார். ஆனாலும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து அதிகாரிகள் தண்ணீரை திறந்து விடாததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து நீர்ப்பாசன துறை அதிகாரிகளுடன் அமைச்சர் புட்டர்ராஜூ நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் தற்போதுள்ள நீரின் அளவு, தென்மேற்கு பருவ மழை நிலவரம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    பின்னர் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து இன்று நள்ளிரவு முதல் தண்ணீர் திறப்பது என்றும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. எவ்வளவு தண்ணீர் திறப்பது என்பது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 90.65 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 942 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 403 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணராஜசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது மாண்டியா மாவட்ட விவசாயிகளின் தேவைக்கு போக மீதம் உள்ள தண்ணீர் தமிழகத்திற்கு வரும். கடும் வறட்சி நிலவுவதால் கர்நாடகாவில் திறக்கப்படும் தண்ணீர் 3 நாட்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தண்ணீர் வரும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 206 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 229 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 41.15 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 40.84 அடியானது.

    Next Story
    ×