search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

    ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இந்த நிலையில் திடீரென நேற்று பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது. மழை காரணமாக கோத்தகிரி பகுதிகளில் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வர ஆரம்பித்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கொடநாடு, அரவேனு, மூன்றுவீடு, அலக்கரை, சோலூர் மட்டம், கடிக்கியூர், கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதில் கோத்தகிரியில் 6 மி.மீ மழையும், கொடநாடு பகுதியில் 23 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென பெய்த மழை வரப்பிரசாதமாக அமைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    குன்னூரில் கடந்த சில நாட்களாக மேகமூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று மதியம் முதல் நகர மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. குன்னூர், அருவங்காடு, பர்லியாறு, கேத்தி, சிம்ஸ்பார்க், மன்னாரபட்டி, வண்டிசோலை, எடப்பள்ளி, இலித்தொரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கேத்தியில் 23 மி.மீ மழையும், குன்னூரில் 6 மி.மீ மழையும், பர்லியாரில் 10 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது.

    இதேபோல் ஊட்டியிலும் மழை பெய்தது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், தொட்டபெட்டா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பெய்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து காணப்பட்டது.

    Next Story
    ×