search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    குடிமராமத்து பணியில் ஊழல்-முறைகேடு: வைகோ குற்றச்சாட்டு

    குடிமராமத்து பணியில் ஊழலும் முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குடிமராமத்துத் திட்டத்தின் நோக்கம் பயனின்றி, ஊழலும், முறைகேடுகளும் தொடர்வதும், அதனை அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்தி வருவதும் வேதனை தருகிறது.

    இந்தக் குடிமராமத்துப் பணிகள் நீர்வள ஆதாரத்துறையினரால் திட்டமிடப்பட்டு விவசாய சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் சங்கங்கள் மூலமாக செயல்படுத்த வழிகாட்டு நெறிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

    இது தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து, சங்கங்களை ஏற்படுத்தி குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான விதிமுறைகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக வகுக்கப்பட்டு, முறையாக பணிகள் நடைபெற வேண்டும் எனவும் அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    குடிமராமத்துப் பணிகள், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 மற்றும் அதன் விதிகளின்படி அசல் ஆயக் கட்டுத்தாரர்களால்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    நேற்று சட்டமன்றத்திலும் இதுகுறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தெரிவித்து உள்ளார்.

    ஆனால் இந்த விதிமுறைகளை எல்லாம் வீசி எறிந்து விட்டு, உள்ளூர் விவசாயிகள், ஆயக்கட்டுதாரர்கள் இல்லாமல், ஆளும் கட்சியினர் தலையீட்டில் பல போலி சங்கங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் குடிமராமத்துத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இந்த முறைகேடுகளால் நீர் நிலைகள் முறையாகத் தூர்வாரப்படாமல், மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுவதுடன், குடிமராமத்துத் திட்டத்தின் நோக்கமும் சிதைகிறது.

    ஆளும் கட்சியினரின் குடிமராமத்து ஊழல்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்த வண்ணம் இருக்கின்றனர்.

    வடலூர் ஐயன் ஏரியை சில நிறுவனங்கள் தத்தெடுத்து சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் தூர்வாரி கரையைப் பலப்படுத்தியுள்ளன. ஆனால் அதே ஏரியைத் தற்போது சேராக்குப்பம் ஐயன் ஏரி என்று பெயர் மாற்றிக் குறிப்பிட்டு, கரையைப் பலப்படுத்த நிதி ஒதுக்கீடு பெற்று, மக்கள் வரிப்பணத்தை ஏப்பமிட முயற்சி நடக்கிறது.

    கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் உள்ள பின்னலூரில் நூற்றாண்டு பழமையான சூடாமணி ஏரி உள்ளது. இரண்டு கிலோ மீட்டர் நீளமும், முப்பது ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த ஏரி, சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன ஆதாரமாக இருக்கின்றது. இதையும் முறையாக ஆழப்படுத்தி தூர்வாராமல், குடிமராமத்துப் பணி பெயரளவுக்கு நடப்பதாக விவசாய சங்கங்கள் புகார் கூறி உள்ளன.

    குடிமராமத்துத் திட்டங்களில் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஆளும் கட்சியினர் உண்மையான ஆயக்கட்டுத்தாரர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கொண்ட சங்கங்கள் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டால் ‘கமி‌ஷன்’ கேட்டுத் தொல்லைப்படுத்துகின்றனர் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

    ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று குடிமராமத்துத் திட்டத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு கடலூர், விழுப்புரம், திருச்சி மாவட்டத்தின் நிலையை படம்பிடித்துக் காட்டி இருக்கின்றேன்.

    தமிழ்நாடு முழுவதும் இதே நிலை இருப்பதால் குடிமராமத்துத் திட்டம் தோல்வியைத் தழுவிவிடும் நிலையும், வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள தமிழகம் அதிலிருந்து மீள முடியாத ஆபத்தும் நேரிடும். எனவே தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்துத் திட்டத்தின் முறைகேடுகளைக் களைந்து, செம்மைப்படுத்தி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

    Next Story
    ×