search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜகோபால்
    X
    ராஜகோபால்

    ராஜகோபால் கவலைக்கிடமா? - உடல்நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

    ஆயுள்தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபாலின் உடல்நலம் குறித்த அறிக்கையை ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் இன்று தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றவர் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால். இவரது மகன் சரவணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் தந்தை ராஜகோபால்(வயது 72), நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. படுத்தபடுக்கையாக இருக்கும், அவருக்கு வலது கண் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இடது கண்ணில் பாதியளவு பார்வை உள்ளது. பிறரது உதவி இல்லாமல், அவரால் எந்த வேலை செய்ய முடியாது.

    இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதன்படி, கடந்த 9-ந்தேதி என் தந்தை படுத்தபடுக்கையாக கோர்ட்டுக்கு தூக்கிவரப்பட்டார். அவரை சிறையில் அடைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது உடல்நலம் மோசமாக உள்ளதால், தற்போது ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை வழங்க மருத்துவ உபகரணங்கள் அங்கு இல்லை.

    என் தந்தைக்கு உதவியாளர்கள் இல்லை. அவரது உடல்நிலை படுமோசமாகி வருகிறது. இதனால், ஏற்கனவே சிகிச்சைப் பெற்று வந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு இடமாற்ற வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 14-ந்தேதி கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சிகிச்சைக்காக என் தந்தையை தனியார் ஆஸ்பத்திரியில் மாற்றும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ராஜகோபாலின் உடல்நலம் குறித்து விவர அறிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யும்படி ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீனுக்கு உத்தரவிட்டனர்.

    Next Story
    ×