search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால்
    X
    சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால்

    ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து மோசம்- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

    ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் உடல்நிலை மோசமாக உள்ளதால் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    சென்னை:

    சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால், தனது ஓட்டலில் பணிபுரிந்தவரின் மகளான ஜீவஜோதியை 3-வதாக திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவரது கணவர் பிரின்ஸ்சாந்தகுமாரை கடத்தி கொலை செய்ததாக கடந்த 2011-ம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது.

    இந்த வழக்கில் ராஜகோபால் உள்பட 12 பேருக்கு பூந்தமல்லி கோர்ட்டு கடந்த 2004-ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த ராஜகோபாலுக்கும், மற்ற குற்றவாளிகளுக்கும் ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபாலும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

    கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடந்து வந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம்தான் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் உடனடியாக ராஜகோபாலும் 11 குற்றவாளிகளும் கோர்ட்டில் சரண் அடைந்து சிறை செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

    ராஜகோபால்

    கடந்த 7-ந்தேதிக்குள் ராஜகோபாலும், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது. இதனை ஏற்று 11 பேரும் சரண் அடைந்து சிறை சென்றனர். ராஜகோபால் மட்டும் சரண் அடைவதில் இருந்து கால அவகாசம் வேண்டும் என்று முறையிட்டார். தனது உடல் நிலை மோசமாக உள்ளதாக கூறி அவரது சார்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

    ‘‘ஒருநாள் கூட ராஜ கோபாலால் சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக அவரை சரண் அடைய உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி ராஜகோபால் படுத்த படுக்கையாக ஸ்டெர்ச்சரில் வந்து ஐகோர்ட்டில் சரண் அடைந்தார். அப்போது அவரது உடல் நிலை சீராக இல்லாததால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதிகள் வார்டில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்டார். அவரது இதய துடிப்பு குறைந்து வந்ததுடன், சுவாசிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் ராஜகோபாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று அதிகாலையில் இருந்தே ராஜகோபாலின் உடல் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. அவர் கவலைக்கிடமாக உள்ளார்.

    ராஜகோபாலின் இளைய மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து அவரை பார்த்தனர். ராஜகோபாலின் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    Next Story
    ×