search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தபால் துறை தேர்வு எழுதிவிட்டு வந்த பெண்கள்
    X
    தபால் துறை தேர்வு எழுதிவிட்டு வந்த பெண்கள்

    தபால் துறை தேர்வு கடினமாக இருந்தது - தேர்வு எழுதியவர்கள் கருத்து

    இந்தி, ஆங்கிலத்தில் வினாத்தாள் இருந்ததால் தபால் துறை தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.
    சென்னை:

    தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் தபால் துறை ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதில் தேர்வு எழுதுவதற்கு 989 ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    அந்தவகையில் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் தபால் துறை தேர்வு நேற்று நடந்தது. தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக தேர்வு எழுத வந்தவர்கள் மிகுந்த சோதனைக்கு பின்னர் தேர்வு அறைக்கு அனுப்பப்பட்டனர். தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரை நடந்தது. முதல் தாள், 2-ம் தாள் என பிரித்து தேர்வு நடத்தப்பட்டது.

    முதல் தாள் சற்று கடினமாக இருந்ததாகவும், 2-ம் தாள் எளிதாக இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

    தேர்வு எழுதிவிட்டு வந்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த உமா கூறுகையில், ‘முதல் தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்ததால் சற்று கடினமாகவே இருந்தது. 2-ம் தாள் நாங்கள் எதிர்பார்த்தபடியே தமிழில் இருந்ததால் நன்றாக எழுதி உள்ளோம்’ என்றார்.

    கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்த அமலா கூறும்போது, ‘இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் முதல் தாள் சற்று கடினமாகவே இருந்தது. எனவே புதிய மொழியை கற்பதில் தவறில்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன்’ என்றார்.

    தேர்வு பற்றி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி கூறுகையில், ‘முதல் தாள் தேர்வில் இந்தியும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தால், அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வரும் காலத்திலாவது தபால் துறை தேர்வுகள் தமிழில் நடைபெற வேண்டும்’ எனக்கூறினார்.

    தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த ஊழியர்கள் பலர் கூறியதாவது:-

    ‘மத்திய அரசின் கீழ் செயல்படும் தபால் துறையில் பணியாற்றி விட்டு இந்தி மொழி தெரியவில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. எனவே இந்தி மொழியை கற்றால் தான் துறையில் எதிர்காலம் உண்டு என்பதையும் உணர்ந்து கொண்டோம். தமிழ், ஆங்கிலம் மட்டும் வைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது’ என பல ஊழியர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×