என் மலர்

  செய்திகள்

  முக ஸ்டாலின்
  X
  முக ஸ்டாலின்

  வேலூர் தொகுதியில் அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றியை அபகரிக்க சூழ்ச்சி - முக ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் தொகுதியில் அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றியை அபகரிக்க சூழ்ச்சி என திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  சென்னை:

  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  டெல்லிக்குச் சென்று, என்ன செய்யப்போகிறார்கள் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் என்று எதுவுமே செய்ய இயலாதவர்கள் நம்மை நோக்கி கேள்வி கேட்டார்கள்.

  இதுவும் செய்வோம், இன்னமும் செய்வோம், இனம்மொழி நலன் காக்க, எதுவும் செய்வோம், அதற்காக எமது உடல் பொருள் உயிர் அனைத்தையும் ஈவோம் என்பதை, தங்களின் ஒவ்வொரு நாள் உயிரோட்டமான நடவடிக்கையிலும் மாற்றார் முகாமும் மலைத்திடும் வகையில், சாதித்துக் காட்டி வருகிறார்கள் நமது மக்களவை உறுப்பினர்கள்.

  மக்களவைத் தேர்தல் நேரத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும் தலைவர் கலைஞரால் ஏற்கனவே மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டவருமான அண்ணன் வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

  திராவிட இனத்தின் செழுமை மிகுந்த குரலாகதமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், பறிபோகும் வாய்ப்புகளைப் பாய்ந்து தடுத்திடவும், அவரது சங்கொலி டெல்லிப் பட்டினத்தில் எதிரொலிக்க இருக்கிறது. கழகத் தொழிற்சங்கமான தொ.மு.ச.வின் செயலாளரும், உழைக்கும் வர்க்கத்தின் நெடிதுயர்ந்த தோழரும், தலைவர் கலைஞரின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றவருமான சண்முகம் கழகத்தின் சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வு பெற்றுள்ளார்.

  மக்கள் நம்மீது வைத்த மாபெரும் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், கழகத்தின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களின் சீர்மிகு செயல்பாடு ஒவ்வொரு நாளும் தொடர்கிறது. பதவியேற் பின்போதே நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க.. பெரியார் வாழ்க.. திராவிடம் வாழ்க.. அம்பேத்கர் வாழ்க....தலைவர் கலைஞர் வாழ்க.. என முழங்கியவர்கள் நம்மவர்கள். வாழ்த்து முழக்கங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் வாழ் வாதாரத்தைப் பாதுகாக்கும் உரிமைப்போர் முழக்கமாக ஒவ்வொரு விவாதத்திலும் உயரிய கருத்துகளை எடுத்துரைக்கிறார்கள்.

  திருமாவளவன்

  கழகக் கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், சமூகக் கெடுதலைக் களைந்திட சளைக்காது உழைத்திடும், அன்புச் சகோதரர் தொல். திருமாவளவன் எம்.பி. மக்களவையில் உரையாற்றும்போது, ரெயில்வே துறையில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து பணிகள் வழங்க வேண்டும் என்பதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்திருக்கிறார்.

  என்ன செய்ய முடியும் எனக் கேட்டவர்களின் வாயை அடைக்கும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி மக்களவை உறுப்பினர்கள் மக்கள் பணியில் அயராது ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட ஜனநாயக வழியில்அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழியில் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

  ஆனால், மாநிலத்தில் ஆட்சியில் உள்ளவர்களோ, நம்முடைய வெற்றியையும் அதன் தொடர்ச்சியாக நடைபெறுகிற தூய பணிகளையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், மிட்டாய் கொடுத்து குழந்தைகளை ஏமாற்றுவதுபோல வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டதாக ஜனநாய கத்தன்மை அற்றவர்களாக நாக்கில் நரம்பில்லாதவர்களாக, நாலாந்தரத்தில் பேசுகிறார்கள்.

  தி.மு.கழகத்தின் மீதும் அதன் தோழமை மீதும் மக்கள் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் 37 எம்.பி.க்கள் மற்றும் 13 எம்.எல்.ஏக்களின் மகத்தான வெற்றி. தி.மு.க. மிட்டாயும் கொடுக்கவில்லை. மக்கள், குழந்தைகளும் இல்லை. வாக்காளர்களை மகேசர்களாகக் கருதிடும் இயக்கம் தி.மு.க.

  அதுபோலவே, பொருளாதார இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் 25 சதவீத கூடுதல் இடங்கள் என்கிற அடுத்த குச்சி மிட்டாயையும் மத்திய ஆட்சியாளர்கள் நீட்டியிருக்கிறார்கள். அதனையும் வாங்கி வாயில் மென்றுகொண்டு, தமிழ் நாட்டின் நூற்றாண்டு கால சமூக நீதிக் கொள்கைக்கு சவக்குழி வெட்டத் தயாராகி விட்டது எடப்பாடி பழனிசாமி அரசு.

  நச்சுப் பாம்புகளான நீட், பொருளாதார இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றிற்கு பால் வார்க்கும் இந்தப் படுமோசமான சக்திகளை வீழ்த்தி சமூக நீதியையும் தமிழ்நாட்டின் தன்மானத்தையும் பாதுகாப்பதற்கு ஜனநாயக ரீதியான வெற்றி களைக் கழகம் பெற்றாக வேண்டும்.

  திட்டமிட்டு சதி செய்துவீணாகப் பழி போட்டு நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் நாள் நடைபெறவிருக்கிறது. பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்த மக்கள் விரோத மத்திய-மாநில ஆட்சியாளர்கள் அதே கூட்டணியுடன் வேலூர் தேர்தலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றியை எப்படியாவது அபகரிக்க முடியுமா என ஆலோசனை நடத்துகிறார்கள்.

  தி.மு.க.வின் வெற்றியை அவர்களின் சூழ்ச்சிகளால் தள்ளிப் போட்டிருக்கலாமே தவிர, எந்நாளும் தட்டிப் பறித்திட முடியாது. வேலூர் கோட்டை எப்போதும் கழகத்தின் வெற்றிக் கோட்டை, இப்போதும் அதில் எள்ளளவும் மாற்றமில்லை என்பதை நிரூபித்திடும் வகையில், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் களப்பணி ஒப்பிட்டுக் காட்ட முடியாத உயர்பணியாக அமைந்திட வேண்டும்.

  சட்டமன்றத் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பொறுப்பாளர்களுடன் இணைந்து, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் களப்பணியாற்றிட வேண்டும். சற்று கண்ணயர்ந்தாலும், அதிகார வெறியில் ஆட்டம் போட்டிட ஆட்சியாளர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்.

  அதற்கு இடம்தராத வகையில், கழகத்தினரின் பணி தொடங்கிடதொடர்ந்திட வேண்டும். உங்களில் ஒருவனான நான் நேரில் வருவேன். உங்கள் பணிகளை உங்களுடன் பங்கேற்பேன். எப்போதும் போல் மக்களுடன் இணைந்திருப்பேன்.

  மக்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாக வேலூர் தொகுதியிலும் மகத்தான வகையிலே வெற்றிக் ‘கதிர்’ ஒளி திசை எட்டும் வீசட்டும்.

  தி.மு.க.வின் சார்பில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒலிக்கின்ற ஒவ்வொரு குரலும் நம் உரிமைக்கான போர்க் குரலாகும். அதற்கேற்ப, வெற்றிப் பயணம் தொடரட்டும்! உரிமைப் போர்க்குரல் உயரட்டும்!

  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  Next Story
  ×