search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதிரி படம்
    X
    மாதிரி படம்

    தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி

    தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியாதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக மத்திய உளவுப்பிரிவினரும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் அதிபயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 259 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

    ஆனால் அதனை இலங்கை அரசு கண்டு கொள்ளாத காரணத்தாலேயே குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவிலும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளிடம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பயங்கரவாத ஆதரவாளர்கள் தொடர்பு கொண்டு பேசியிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் ஒருவர் பிடிபட்டார். அவர் இலங்கை பயங்கரவாத குண்டு வெடிப்பு தலைவனுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

     

    இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு

    இவருடன் சென்னையில் பலர் நெருங்கிய நட்புடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மண்ணடி லிங்குசெட்டி தெருவில் ‘வகாத்- இ-இஸ்லாமி ஹிந்த்’ என்ற அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அங்கு போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். நேற்று காலை 6 மணியில் இருந்து இரவு வரை சோதனை நடை பெற்றது.

    இந்த அமைப்பின் தலைவரான சையது புகாரியின் வேப்பேரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் செல்போன்கள், லேப்டாப்கள், பென்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    சோதனைக்கு பிறகு சையது புகாரியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிண்டியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மண்ணடியில் உள்ள அலுவலகத்தில் நடந்த சோதனையின் போது சையது புகாரியின் கூட்டாளிகள் 2 பேரும் பிடிபட்டனர். அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே நாகப்பட்டினத்தில் ஹசன்அலி யூனுஸ் மாரிக்கர், முகமது யூசுப்கான் ஹரிஸ்முகமது ஆகிய 2 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அவர்களது வீட்டிலும் லேப்டாப், செல்போன்கள், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இருவரையும் நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதன்பிறகு சென்னைக்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக 2 பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக 3 பேர் மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இவர்கள் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சென்னை-நாகையில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பிடிபட்ட 3 பேரும் யார்-யாருடன் தொடர்பில் இருந்தார்கள்? இவர்களின் முழுமையான பின்னணி என்ன? என்பது பற்றி அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    Next Story
    ×