search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாடு
    X
    குடிநீர் தட்டுப்பாடு

    ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் திருட்டை தடுக்க கோரி பெண்கள் மறியல்

    ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர் திருட்டை தடுக்க கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் யூனியன் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

    ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சிந்தலைப் பட்டியில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வழங்க வில்லை. நேற்று மாலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட போது பல இடங்களில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து விட்டனர். இதனால் பலருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் குடிநீர் வழங்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இன்று காலை காலிக்குடங்களுடன் அப்பகுதி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த பஸ் மற்றும் வாகனங்களையும் சிறை பிடித்து செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தனர். மேலும் யூனியன் அதிகாரிகளை வரவழைத்து இனிமேல் குடிநீர் வழங்கும் போது மின் இணைப்பை துண்டித்து அதன் பிறகு தண்ணீர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் குடிநீர் எடுப்பதற்காக மோட்டார் பொருத்தியிருந்த பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்தனர். அதன் பிறகு 2 மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×