search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதாசிவத்துக்கு பட்டம் வழங்கும் ஜனாதிபதி
    X
    சதாசிவத்துக்கு பட்டம் வழங்கும் ஜனாதிபதி

    கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ டாக்டர் பட்டம்- ஜனாதிபதி வழங்கினார்

    சென்னை சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.
    சென்னை:

    கேரள மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வருபவர் சதாசிவம். இவருக்கு சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

    பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திறம்பட செயல்பட்டவர் சதாசிவம்.



    உயர் நீதிமன்றங்களில் வெளியாகும் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டால் மக்களுக்கு எளிதில் சென்றடையும்.

    கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மலையாளத்திலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய விருப்பம்.

    மக்களிடம் சட்டம் குறித்த அறிவை கொண்டு சேர்க்க வேண்டிய தேவை தற்போது இருக்கிறது. வசதி படைத்தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் ஒரே மாதிரியான நீதியை வழங்கும் பணியை நீதித்துறை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    இதில் தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    தமிழகத்தை சேர்ந்த சதாசிவம், அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பயின்று, பட்டம் பெற்று வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். அதன்பின் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×