search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    காவிரியில் தண்ணீர் திறந்து விட கோரி திருவாரூர் மாவட்ட விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்

    கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட கோரி திருவாரூர் மாவட்ட விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மன்னார்குடி:

    தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுவது டெல்டா மாவட்டங்கள். அதிக அளவில் விவசாய நிலங்களை கொண்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆண்டு தோறும் சம்பா, குறுவை, தாளடி சாகுபடி நடைபெறுவது வழக்கம். டெல்டா மாவட்ட சாகு படிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் நிலத்தடி நீரையும், பருவ மழையையும் நம்பி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

    இந்த நிலையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் பயிரை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகிறார்கள். பருவ மழையும் ஏமாற்றி வருவதால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்று கலக்கம் அடைந்துள்ளனர்.

    டெல்டா விவசாயிகளுக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும், ஆறு, குளம், ஏரி, கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் ஆறுகளில் இறங்கி விவசாயிகள் இன்று (12-ந் தேதி) போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை உள்பட 20 இடங்களில் பாண்டவையாறு, ஓடம் பாக்கி ஆறு, வெட்டாறு, கடுவையாறு, வால வாய்க் கால் ஆகிய வற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார்.

    இதேபோல் மன்னார்குடி கீழப்பாலம் பா மணி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் வை. செல்வராசு, மாநிலக் குழு உறுப்பினர் மாலா பாண்டியன், ஒன்றிய செயலாளர் வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், மாதர் சங்க ஒன்றிய தலைவர் வனிதா தேவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டணர்.

    இதுபோன்று கோரையாறு அரிச்சந்திரா நதி பாலம் அருகில் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கர வள்ளி , பெரியசாமி, வெண்ணாறு பழையனூர் பாலம் அருகில் சிமாரியப்பன் வெள்ளையாறு வேளுக்குடி ஆற்றுப்பாலம் அருகில் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், மகேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×