
ஆரணி:
ஆரணி பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் யோகானந்தம் (வயது 30). இவர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரிடம் அதிக பணப்புழக்கம் இருந்ததால் அதே பகுதியை சேர்ந்த உறவினரான துளசிங்கம் என்பவரின் மகன் பாண்டியன் (27) அடிக்கடி செலவுக்கு பணம் வாங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூதாட்ட வழக்கில் யோகானந்தம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆனால் பாண்டியன், யோகானந்தத்திடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு இறைச்சி கடைக்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு பேசிக்கொண்டிருந்த அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரமடைந்த பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யோகானந்தத்தை சரமாரியாக குத்தினார். அதில் யோகானந்தம் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து பாண்டியன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெனீஸ் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட யோகானந்தத்துக்கு மாலதி என்ற மனைவியும், விவேத்ரா என்ற மகளும், மோனீஸ் என்ற மகனும் உள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாண்டியனை கைது செய்தனர்.
பாண்டியனின் நண்பர் ஒருவர் பிறந்த நாள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தது. பாண்டியன் தலைமையில் ஆரணி பழைய பஸ் நிலையத்தில் நள்ளிரவு பிறந்த நாள் கொண்டாடினர்.
கேக் வெட்டி, பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.