search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூதாட்டி திருப்பதிக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூதாட்டி திருப்பதிக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

    மனு கொடுத்த 5 நாளில் தீர்வு- மூதாட்டிக்கு உதவித்தொகை பெற ஆணையை வழங்கிய முதலமைச்சர்

    தென்காசிக்கு வருகை தந்த போது வாழ்வாதாரத்திற்கு உதவிட கோரி மனு அளித்த மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6.7.2019 அன்று திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தார்.

    பாளையங்கோட்டையில் பொதுமக்கள் திரண்டு வந்து முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பாளையங்கோட்டை சிறுதுணை நயினார் தெருவை சேர்ந்த திருப்பதி என்ற வயதான மூதாட்டி கூட்டத்தில் தடுமாறி வந்ததை அறிந்த முதல்-அமைச்சர் அந்த மூதாட்டியை வரவேற்பு மேடைக்கு அழைத்து வரச் சொன்னார். அவரிடம் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட போது, எனது வாழ்வாதாரத்திற்கு உதவி செய்திட வேண்டும் என்று கூறி ஒரு மனுவை முதல்- அமைச்சரிடம் வழங்கினார்.

    அந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், தான் இன்னும் நான்கு நாட்கள் கழித்து இந்தபகுதிக்கு வரும் பொழுது என் கையாலேயே உங்களுக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்குவேன் என தெரிவித்து அந்த மூதாட்டிக்கு ஒரு சால்வை அணிவித்து அனுப்பி வைத்தார்.

    அந்த மனுவின் மீது எடுத்த நடவடிக்கையின் காரணமாக இன்று காலை தூத்துக்குடியில் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் அந்த மூதாட்டியிடம் வழங்கினார். உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை பெற்றுக் கொண்ட மூதாட்டி முதல்-அமைச்சருக்கு மகிழ்ச்சி பொங்க நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

    வெங்கடேஸ்வரன் என்பவருக்கு 3 சக்கரமிதி வண்டியை முதலமைச்சர் வழங்கினார்


    அதேபோன்று சிவன் மேலத்தெரு ஜே.ஜே.நகர் பகுதியை சார்ந்த விதவை பெண்ணான சுப்புலட்சுமிக்கு பிற்பட்டோர் நலத்துறையின் மூலம் இலவச தையல் இயந்திரமும், சிவன்கோவில் தெருவை சார்ந்த பி.பாலா என்பவருக்கு மகளிர் திட்டத்தின் மூலம் முத்ரா கடன் திட்டத்தின் கீழ்கடன் உதவியும், திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரக்குளம் சிவன் கோவில் கீழத் தெருவை சார்ந்த வெங்கடேஸ்வரன் என்பவருக்கு 3 சக்கரமிதி வண்டியையும் வழங்கினார். முதல்- அமைச்சரிடம் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா பிரபாகர், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×