search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவருடன் நந்தினி
    X
    கணவருடன் நந்தினி

    வேலூர் தொகுதியில் வீதி வீதியாகச்சென்று மதுக்கடைக்கு எதிராக பிரசாரம்- வக்கீல் நந்தினி பேட்டி

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வீதி வீதியாகச் சென்று மதுக்கடைக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக வக்கீல் நந்தினி தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை தனது தந்தையுடன் இணைந்து நடத்தி வந்தார் மதுரை கே.புதூரைச் சேர்ந்த வக்கீல் நந்தினி. போராட்டத்தின் எதிரொலியாக கைதான இவர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி.

    அதன்படி நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் கடந்த 5-ந்தேதி நடைபெற இருந்த நந்தினியின் திருமணம் நின்று போனது. 9-ந்தேதி விடுதலையான நந்தினிக்கு உடனே திருமணம் செய்வதென முடிவெடுத்தார் ஆனந்தன்.

    நந்தினி திருமணத்தின் போது எடுத்த படம்.

    அவரது எண்ணப்படியே நந்தினியின் குல தெய்வமான மதுரை மாவட்டம் தென்னமநல்லூரில் உள்ள பட்டவன் சுவாமி கோவிலில் நந்தினி-குணா ஜோதிபாசு திருமணம் நேற்று முன்தினம் நடந்தது. நந்தினியை கரம் பிடித்துள்ள குணா ஜோதிபாசு சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். கரூரைச் சேர்ந்தவர்.

    பரபரப்பாக திருமணம் முடிந்துள்ள நிலையில், கே.புதூரில் உள்ள நந்தினி வீட்டில் அவரை சந்தித்தோம். ‘‘மாலை மலர்’’ நிருபரிடம் அவர் கூறியதாவது:-

    மதுரை கே.புதூர் எனது சொந்த ஊர். எனது தந்தை ஆனந்தன். தாயார் லட்சுமி. எனக்கு ஒரே ஒரு தங்கை அவர் பெயர் நிரஞ்சனா.

    மதுரை சட்டக்கல்லூரியில் நிரஞ்சனா 5-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நான் கரூரில் 10-ம் வகுப்பும், மதுரை கே.புதூரில் 12-ம் வகுப்பும் படித்தேன். மதுரை சட்டக் கல்லூரியில் 2010-ம் ஆண்டு சேர்ந்தேன். அங்கு நான் முதலாம் ஆண்டு படிக்கும் போது அரசியல் அமைப்பு சட்டத்தின் 328-வது பிரிவின் கீழ் மதுபானம் என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும்.

    இத்தகைய பொருட்களை விற்பது சட்டத்துக்கு புறம்பானது என்ற விவரம் தெரிய வந்தது. ஆனாலும் இதனை அரசாங்கம் ஏன் விற்பனை செய்கிறது? என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.

    என் தோழிகளின் குடும்பத்தில் பலர் குடிபோதைக்கு அடிமையாக இருந்தது என்னை வேதனைப்பட வைத்தது.

    இதற்கிடையே என் தந்தை ஆனந்தன் 2010-ம் ஆண்டு மதுரை சட்டக் கல்லூரி முன்பு விலைவாசிக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். அது தான் நான் சமூக அளவில் நடத்திய முதல் போராட்டம்.

    இதுவரையில் 100-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்டு கைதாகி சிறைக்கு சென்று உள்ளேன்.

    என் கணவர் குணா ஜோதிபாசு சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்தவர். மதுவிலக்குக்கு எதிராக நான் முன்னெடுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளார்.

    மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கடைகளை படிப்படியாக அடைக்கவில்லை. மளமளவென்று திறந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    இன்றைக்கு பெட்டிக்கடைகளில் கூட மதுபானம் கிடைக்கிறது. பலசரக்கு கடையில் பொருட்கன் வாங்குவது போல குடி மகன்கள் மதுவை வாங்கி செல்வது வேதனை தருகிறது.

    தமிழகத்தில் மதுபான கடைகளை ஒட்டு மொத்தமாக அடைத்தால் குடிமகன்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற கூற்று சரியல்ல.

    நானும் அப்பாவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக சமீபத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தோம்.

    அங்கு ஆண்கள் சிறையில் 1500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குடிப்பழக்கம் உடையவர்கள் தான். அங்கு மதுபானம் கிடைக்காது என்பதால் அவர்கள் குடிப்பழக்கத்தை கைவிட்டு உள்ளனர்.

    எனவே தமிழக அரசு முதலில் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக மதுபான கடைகளை அடைத்து விட்டு, குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகளை செய்து தர வேண்டும்.

    தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த காமராஜர், அண்ணா காலத்தில் மதுபானம் என்பது அறவே இல்லை. எனவே அவர்கள் மாநிலத்தில் தொழிற்சாலை, அணைகள் கட்டுவதில் ஆர்வம் செலுத்தினார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை.

    2010-ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் நான் சட்டக்கல்லூரி படிப்பை 2015-ம் ஆண்டு முடிக்கும்வரை தொடர்ந்தது.

    படிக்கும் காலத்திலேயே மின்வெட்டைக் கண்டித்து போராட்ட களத்தில் குதித்தேன். அதன் தொடர்ச்சியாக விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினேன். சமூக நீதிக்கு எதிரான மோடி அரசை கண்டித்தும் வேலை வாய்ப்புகளை உருவாக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியுள்ளேன்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட என்னை காவல் துறை கைது செய்து சிறையில் அடைக்கும். அதன்பின்னர்தான் எனக்கு போராட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. தொடர்ந்து சமூக நீதிக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடும் வரை எனது போராட்டம் தொடரும். எனது கணவரும் போராட்டத்துக்கு துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளார். இதனால் திருமணத்துக்குப் பின்னர் போராட்டம் நடத்த எனது கணவரின் ஆதரவும் சேர்ந்துள்ளது.

    பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நான் எனது கணவர் மற்றும் எனது ஆதரவாளர்கள் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு செல்ல உள்ளோம். அங்கு வீடு வீடாகச் சென்று மதுவின் தீமைகளை உணர்த்தும் துண்டு பிரசுரங்களை கொடுப்போம். டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தும் வாசகங்களும், விழிப்புணர்வு வாசகங்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.

    காவல்துறையிடம் உரிய அனுமதி பெற்று மதுக்கடைகளை மூடக்கோரி வீதி வீதியாக போராட்டம் நடத்துவோம். அப்போது மதுக்கடைக்கு எதிராக பிரசாரம் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×