search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை (கோப்பு படம்)
    X
    கொலை (கோப்பு படம்)

    தினமும் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததால் வாலிபரை கொன்றேன் - கைதான காய்கறி வியாபாரி வாக்குமூலம்

    மது குடித்து விட்டு தினமும் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததால் வாலிபரை கொலை செய்ததாக கைதான காய்கரி வியாபாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 35). இவர் நெல்லித் தோப்பு மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    திருமணமாகாத இவர் அவ்வப்போது இரவு வீட்டுக்கு செல்லாமல் மது குடித்து விட்டு இறைச்சி கடையிலேயே தூங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று காலை இறைச்சி கடையில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அப்போது மார்க்கெட்டுக்கு வந்தவர்கள் இதனை பார்த்து உருளையன் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழ்வாணன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் அவரை அங்கு காய்கறி கடையில் வேலை பார்க்கும் எல்லைப்பிள்ளை சாவடியை சேர்ந்த தேவா என்ற தேவநாதன் என்பவர் தூங்கிக்கொண்டு இருந்த தமிழ்வாணன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழ்வாணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தமிழ்வாணனை கொலை செய்து தலைமறைவான தேவாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மதுக்கடையில் மதுகுடித்துக்கொண்டு இருந்த தேவாவை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    தேவாவிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழ்வாணனை கொன்றது ஏன்? என்பது குறித்து திடுக்கிடும் தகவல்களை தேவா தெரிவித்தார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், தமிழ்வாணனும் நண்பர்கள். நாங்கள் இருவரும் வேலை முடிந்த பின்பு மாலையில் ஒன்றாகவே மது குடிப்போம். அவ்வப்போது குடிபோதையில் என்னை தமிழ்வாணன் அடித்து உதைப்பார்.

    என்னைவிட 10 வயது குறைந்தவரான தமிழ்வாணன் உடல் பருமனாக இருந்ததால் அவரை என்னால் தாக்க முடியவில்லை. இதனால் தினமும் சித்ரவதைக்குட்பட்டு வந்தேன்.

    மேலும் சில நேரங்களில் என்னை மதுப்பாட்டில் மற்றும் தின்பண்டங்கள் வாங்கி வருமாறு தமிழ் வாணன் தொல்லை கொடுப்பார். அப்படி வாங்கி கொடுக்காவிட்டால் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குவார்.

    அதுபோல் நேற்று முன்தினம் இரவு நாங்கள் இருவரும் ஒன்றாக மது குடித்துவிட்டு நெல்லித் தோப்பு மார்க்கெட்டுக்கு வந்தோம். அப்போது தமிழ்வாணன் மீண்டும் மதுபாட்டில் வாங்கி வருமாறு என்னிடம் கூறினார். ஆனால், இதற்கு நான் மறுத்து விட்டேன்.

    இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்வாணன் என்னை சரமாரியாக தாக்கினார்.

    அப்போது தமிழ்வாணன் வேலை பார்த்த இறைச்சி கடையின் உரிமையாளர் விவேக் தலையிட்டு எங்கள் இருவரையும் சமாதானம் செய்ததோடு தமிழ்வாணனையும் கண்டித்து விட்டு சென்றார்.

    ஆனால், எனக்கு தமிழ் வாணன் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. தினம், தினம் தமிழ்வாணனிடம் இருந்து சித்ரவதை அனுபவிப்பதை விட அவரை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு சென்று நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

    தமிழ்வாணனை எப்படி கொலை செய்வது? என்று இரவெல்லாம் தூங்காமல் விழித்து இருந்தேன்.

    நேற்று காலை 7 மணிக்கு மதுக்கடைக்கு சென்று மது குடித்து விட்டு மீண்டும் நெல்லித்தோப்பு மார்க்கெட்டுக்கு வந்தேன். அப்போது இறைச்சி கடையில் தமிழ்வாணன் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்தார்.

    இதுதான் நல்ல சந்தர்ப்பம் என கருதிய நான் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து தமிழ்வாணனின் தலையில் போட்டேன். ஆனால், அவன் உயிர் பிரியவில்லை. கண்விழித்து என்னை பார்த்தான்.

    இனியும் இவனை உயிரோடு விட்டால் என்னை தீர்த்துக்கட்டி விடுவான் என எண்ணிய நான் மீண்டும் அதே பாறாங்கல்லை எடுத்து அவன் தலையில் போட்டேன். இதில், தமிழ்வாணன் துடிதுடித்து இறந்து போனான்.

    பின்னர் அங்கிருந்து சட்டையில் ரத்தக்கறையுடன் வெளியேறிய போது அங்கிருந்தவர்கள் எனது சட்டையில் படிந்திருப்பது பற்றி கேட்டனர். அதற்கு நான் மீன் வெட்டும் போது ரத்தம் சிதறி விட்டது என்று கூறி சமாளித்து விட்டு வந்து விட்டேன்.

    பின்னர் மாலையில் மதுக்கடையில் மது குடித்து கொண்டிருந்த போது போலீசார் என்ன மடக்கி பிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கொலை நடந்த சில மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்த உருளையன்பேட்டை போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு செல்வம் (பொறுப்பு) ஆகியோர் பாராட்டினர்.
    Next Story
    ×