search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் திடீர் மழையால் குளிர்ச்சி - பொதுமக்கள் மகிழ்ச்சி

    திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் திடீர் மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    திருச்சி:

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்ற னர்.

    வருண பகவான் மழை பொழிய வேண்டி, கோவில்கள், பள்ளிவாசல்கள், ஆலயங்களில் பொதுமக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பது போல் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக குடுமியான்மலையில் 69 மி.மீ. மழை பெய்துள்ளது. இதே போல் மற்ற இடங்களிலும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல நாட்களுக்கு பிறகு மழையை பார்த்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊற்றுத் தண்ணீரை பிடித்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெய்துள்ள மழை ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுக்கும் என்பதால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    அரியலூர் மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. அரியலூரில் 38, ஜெயங்கொண்டத்தில் 35,செந்துறையில் 33 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம், நாகநல்லூர், பாதர்பேட்டை, முருங்கப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. பாதர் பேட்டையில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இடி தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

    திருச்சி மாநகர் பகுதியில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை பெய்யாததால் மாநகர பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் குளிர்ந்த காற்று வீசியதால் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் கரூர், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை லேசான தூரலுடன் மழை பெய்தது.

    நேற்று பெய்த மழை பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளித்திருந்தாலும் இன்று காலை முதல் 5 மாவட்டங்களிலும் எப்போதும் போல் வெயில் வாட்டி வதைத்தது.

    Next Story
    ×