search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் மரம் விழுந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
    X
    மழையால் மரம் விழுந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

    புதுவையில் திடீர் மழை

    புதுவையில் நேற்றிரவு பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    தமிழகம்-புதுவையில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்திருந்தது.

    புதுவையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. 100 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்துவதால் புதுவை மக்கள் காலை நேரத்தில் நடமாடுவதே குறைந்துள்ளது.

    இதே நிலை நேற்று காலையும் நீடித்தது. ஆனால், மாலையில் நிலைமை மாறியது. மாலை 6 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்தது.

    வானம் இருண்டு மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், மழை பெய்யவில்லை. இரவு 8 மணியளவில் குளிர்ந்த காற்று வீசியது. இதனையடுத்து சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது.

    ஆரம்பத்தில் லேசான ‘சாரல்’ மழையே பெய்தது. ஆனால், இரவு 8 மணிக்கு மேல் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ள பெருக்கெடுத்து ஓடியது.

    சுமார் 30 நிமிடத்துக்கு இந்த மழை நீடித்தது. நகரம், புறநகர் மற்றும் கிராமப்புறங்களிலும் மழை பெய்தது. பரவலாக பெய்த மழையினால் புதுவையில் குளிர்ந்த சூழல் ஏற்பட்டது.

    மழையால் அண்ணா சாலை-ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் இருந்த பழமையான மரம் திடீரென பயங்கர சத்தத்துடன் வேரோடு சாய்ந்து விழுந்தது. சத்தம் கேட்டவுடன் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    மரம் விழுந்த போது அதன் அடியில் நின்றிருந்த ஒரு ஆட்டோ மரத்துக்கு அடியில் சிக்கி பலத்த சேதம் அடைந்தது. இதில் ஆட்டோ முற்றிலும் சேதம் அடைந்தது. நல்ல வேளையாக அந்த ஆட்டோவில் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மரம் ரோட்டின் குறுக்காக விழுந்ததால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்தவுடன் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை மாற்றி அமைத்தனர். அண்ணா சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

    பின்னர் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை சாலையில் இருந்து அகற்றினர்.

    பின்னர் நவீன கருவிகள் உதவியுடன் மரத்தை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

    Next Story
    ×