search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை (கோப்பு படம்)
    X
    கொலை (கோப்பு படம்)

    திருச்சி ரவுடி கொலையில் பைனான்ஸ் அதிபர் உள்பட 3 பேர் சிக்கினர்

    திருச்சியில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பைனான்ஸ் அதிபர் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவெறும்பூர்:

    திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தைச் சேர்ந்தவர் ரஜினி என்ற கருப்பையா (வயது 35). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று மதியம் கருப்பையா தனது நண்பர் ரஞ்சித்குமார் என்பவருடன் திருவெறும்பூர் எழில் நகர் தண்டவாளம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் வழி மறித்து கருப்பையாவை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது.

    தடுக்க முயன்ற அவரது நண்பர் ரஞ்சித்குமாரையும் வெட்டிவிட்டு தப்பியது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார்.

    கருப்பையாவை கொலை செய்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பைனான்ஸ் நிறுவனத்தில் காரை அடமானம் வைத்து பணம் வாங்கி விட்டு அதை திருப்பி கொடுக்காத பிரச்சினையில் கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்தது.

    கருப்பையா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைனான்ஸ் நிறுவனம் உதவியுடன் ஒரு கார் வாங்கினார். அதை அவரது அம்மா பெயரில் வாங்கியிருந்தார். ஆனால் கார் வாங்க நிதி உதவி செய்த நிறுவனத்திற்கு அவர் மாத தவணையை திருப்பி செலுத்தவில்லை. இதனால் காரை பறிமுதல் செய்ய அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

    இதற்கிடையே கருப்பையா அந்த காரை துப்பாக்கி தொழிற்சாலை அண்ணா நகரைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் குரு என்பவரிடம் ரூ.3 லட்சத்துக்கு அடமானம் வைத்து விட்டார். ஆனால் அவருக்கு வட்டி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் பணத்தை திருப்பி கொடுக்கும்படி குரு கருப்பையாவிடம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

    ஆனால் அவரை மிரட்டிய கருப்பையா, காரை விற்று பணத்தை தருகிறேன் எனக் கூறி அடமானம் வைத்த காரையும் அங்கிருந்து எடுத் துச்சென்று விட்டார். பணத்தையும் தராமல் அடமானத்திற்காக கொடுத்த காரையும் ரஜினி எடுத்து சென்றதால் ஆத்திரம் அடைந்த பைனான்ஸ் அதிபர் குரு, கருப்பையாவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார். அதற்கான தருணத்தையும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்.

    இந்தநிலையில் கார் வாங்க லோன் கொடுத்து உதவிய பைனான்ஸ் நிறுவனமும் மாத தவணை கட்டாததால் கருப்பையாவின் தாய் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கருப்பையாவின் தாயாருக்கு கோர்ட்டில் ஆஜராக கூறி சம்மன் அனுப்பியது.

    இது தொடர்பாக வக்கீலை பார்ப்பதற்காக ரஜினி நேற்று தனது நண்பருடன் சென்றபோது அவரை தீர்த்துக்கட்ட பின் தொடர்ந்தனர். எழில்நகர் காட்டுப்பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே காரில் காத்திருந்தனர். கருப்பையா அந்த வழியாக வந்ததும் திடீரென வழி மறித்தனர்.

    உடனே சுதாரித்துக் கொண்டு அவர் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அரிவாளால் கருப்பையாவை வெட்டி கொன்றது. பிறகும் ஆத்திரம் தீராமல் உடலை அரை நிர்வாணமாக்கி அருகில் இருந்த உய்யக்கொண்டான் வாய்க்காலில் தூக்கி வீசிவிட்டு சென்றது.

    இந்த தகவல் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் பைனான்ஸ் அதிபர் குரு உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×