search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகிலன்
    X
    முகிலன்

    மருத்துவமனையில் டிஸ்சார்ஜான முகிலனை கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு

    ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜான சமூக செயற்பாட்டாளர் முகிலனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஆவண படத்தை முகிலன் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் வெளியிட்டார்.
     
    ஆவணப்படத்தை வெளியிட்ட பின்னர் சென்னையில் இருந்து ரெயிலில் மதுரைக்கு சென்றபோது அவர் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர். 

    இதற்கிடையே, சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் சண்முகம் தெரிவித்தார். முகிலனை நேரில் பார்த்த தகவலை அவரது மனைவியிடம் கூறினார். முகிலன் ஆந்திர காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ளார் என்பதால் சிபிசிஐடி உடனடியாக ஆந்திர காவல்துறையை அணுக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதன்படி முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையேற்று, காட்பாடி ரெயில்வே காவல் நிலையத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். பின்னர் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் காட்பாடி சென்றனர். அங்கிருந்த ஆந்திர போலீசார், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

    அவர்கள் முகிலனை பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இரவில் நெஞ்சுவலி என கூறியதால் முகிலனை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வந்தனர். 

    இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகிலனை சிபிசிஐடி போலீசார் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கரூர் பெண் அளித்த பாலியல் புகார் தொடர்பாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது, 24 மணி நேரத்திற்குள் கரூர் நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்படுத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவரை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
    Next Story
    ×