search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது எடுத்த படம்.
    X
    தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது எடுத்த படம்.

    ஊராட்சி, பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

    அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    நடப்பு ஆண்டில், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில் 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் “அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு” அமைக்கப்படும்.

    ஒவ்வொரு கிராமத்திலும், கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு களம் அமைக்கும் பணிகள், ஊரகப் பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியிலிருந்தும் மேற்கொள்ளப்படும்.

    இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து, ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையால் நடத்தப்படும்.

    வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் பரிசுகள் வழங்கப்படும்.

    ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில், ஆண்டு முழுவதும் விளையாட்டு சாதனங்கள் வழங்கவும், திறந்த வெளி உடற்பயிற்சி மையம் அமைக்கவும், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கவும் 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் அவற்றின் தொடர் செலவினத்திற்காக மாநிலஅரசின் நிதியிலிருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் மேற்கொள்ளப்படும்.

    அனைத்து முக்கியமான சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சீனியர் மற்றும் ஜுனியர் பிரிவுகளில் பதக்கம் வெல்பவர்களுக்கும் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கும் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    சென்னை நேரு பூங்கா அருகில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பழைய தலைமை அலுவலகக் கட்டடத்தை இடித்து விட்டு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.

    தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆசிரியர் குடியிருப்புகள் 3.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

    மாநில தகவல் ஆணையத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டப்பட வேண்டிய அவசியத்தைக் கருதி, இதற்கென சென்னை, சைதாப்பேட்டையில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன.

    மாநில தகவல் ஆணையத்திற்கு, விசாரணை அறைகள், ஆணையர்களுக்கான அறைகள், அலுவலக அறைகள், மனுதாரர்களுக்கான காத்திருக்கும் அறைகள், நூலகம், கூட்ட அரங்கு, வாகன நிறுத்துமிடம், மனுதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திட தரைத்தளம் மற்றும் 5 தளங்களைக் கொண்ட சொந்தக் கட்டடம் ஒன்று 27.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

    விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக் குப்பம் கழிவேலியில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் மீன்பிடித் துறைமுகங்கள் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த மீன் பிடி துறைமுகங்களில், 250 இயந்திர படகுகளும், 1,100 வெளிப் பொருத்தும் மோட்டார் கண்ணாடி நாரிழை படகுகளும் நிறுத்த இயலும். இதனால் சென்னை மற்றும் கடலூரில் உள்ள மீன் பிடி துறைமுகங்களில் நெருக்கடி குறைக்கப்படும்.

    மீன்பிடி துறைமுகம்


    100 விசைப் படகுகள் மற்றும் 500 கண்ணாடி நாரிழைப் படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக 150 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய மீன்பிடி துறைமுகம் ஆற்காட்டுத் துறையில் அமைக்கப்படும். இதனால், இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 10,000 மீனவர்கள் பயன்பெறுவார்கள்.

    சென்னை மீன்பிடி துறைமுகத்தில் 200 மெட்ரிக் டன் அளவில் மீன்கள் கையாளப்படுகிறது. சுமார் 30,000 பேர் தினமும் இத்துறைமுகத்தில் மீன்பிடி மற்றும் மீன் விற்பனைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

    இம்மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, 10 கோடி ரூபாய் செலவில் துறைமுகத்தின் தென் பகுதியில், சிறிய படகு அணையும் தளமும், பெரியபடகு அணையும் தளமும் மற்றும் மீன் விற்பனை கூடமும் அமைக்கப்பட உள்ளது.

    மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, தமிழ்நாட்டிலுள்ள 20 மாவட்டங்களில் மிகவும் பின் தங்கிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளிலுள்ள பெண் பயனாளிகளுக்கு 90 விழுக்காடு மானியத்தில் பயனாளிக்கு தலா 10 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் மற்றும் ஒரு வெள்ளாடு அல்லது செம்மறி ஆட்டுக் கிடாவீதம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம், 6 ஆண்டுகளுக்குப் பிறகு நன்கு வளர்ந்த செம்மறி மற்றும் வெள்ளாடுகளை விற்பதன் மூலம் ஒரு பயனாளி, முறையே ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 1.80 லட்சம் முதல் 2.70 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படுகிறது.

    நடப்பாண்டில் அனைத்து மாவட்டங்களிலும், மொத்தம் 2.50 லட்சம் கால்நடை அலகுகள் 22.46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காப்பீடு செய்யப்படும். பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு 70 சதவீத மானியத்துடனும், மற்ற பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்துடனும், மலைப் பகுதியில் உள்ள பட்டியல்வகுப்பு, பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு 80 சதவீத மானியத்துடனும், இதர பயனாளிகளுக்கு 60 சதவீத மானியத்துடனும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    பால் உற்பத்தி பெருக, காளை கன்றுகளை விட கிடேரி கன்றுகள் பிறப்பதையே விவசாயிகள் அதிகம் விரும்புகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, உதக மண்டலம் மாவட்ட கால்நடைப் பண்ணையில் செயல்பட்டுவரும் விந்து உற்பத்தி நிலையத்தில், விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் 47.50 கோடி ரூபாய் செலவில் நடப்பாண்டில் ஏற்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×