search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மடிக்கணினி வழங்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

    பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மடிக்கணினி வழங்க கோரி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அரசின் சார்பில் வழங்கப்படும் லேப்டாப் வழங்க வலியுறுத்தி பாலக்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2017 2018 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் -1 பயின்ற 380 மாணவ, மாணவிளுக்கு அரசால் வழங்கப்படும் லேப்டாப் வழங்கப்படவில்லையாம்.

    இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

    இதனிடையே 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 350க்கும் மேற்பட்ட லேப்டாப்கள் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வர பெற்றுள்ளது.

    தகவலறிந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரம்பலூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜனை அணுகி லேப்டாப் வழங்க கோரியுள்ளனர். இதற்கு தலைமை ஆசிரியர் 2017- 2018 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்- 1 பயின்றவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு இன்னும் அனுப்பவில்லை என்றாராம்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் லேப்டாப் வழங்காததை கண்டித்தும், உடனடியாக அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அரசின் இலவச லேப்டாப் பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் கல்வித்துறையினரும் சம்பவஇடத்திற்கு சென்று மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×