search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை (கோப்பு படம்)
    X
    கொள்ளை (கோப்பு படம்)

    மார்த்தாண்டம் அருகே தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

    மார்த்தாண்டம் அருகே மாடியில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டத்தை அடுத்த நெல்வேலி குமுட்டி விளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி ராஜலெட்சுமி (வயது 39).

    இவர் நேற்று தனது வீட்டு மேல் மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக கதவையும் அவர் திறந்து வைத்திருந்தார். அவரது வீட்டு மாடிக்கு அருகில் மரம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் அந்த மரத்தின் வழியாக மர்மநபர் ஒருவர் மாடிக்கு சென்றார். அங்கு அறையில் தூங்கிக் கொண்டிருந்த ராஜலெட்சுமியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்தார்.

    தூங்கிக் கொண்டிருந்த ராஜலெட்சுமி விழித்துப் பார்த்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் தனது கழுத்தில் கிடக்கும் செயினை பறிப்பது தெரியவந்தது. உடனே செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் ராஜலெட்சுமியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயின் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டான்.

    இதுபற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கன்னியாகுமரி சந்திப்பு பகுதியில் அரிசிக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் கடைக்கு வந்த போது கடையின் மேல் கூரை உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள் சென்று பார்க்கும் போது கடை மேஜை டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.3 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த கண்காணிப்பு காமிரா ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மேஜை உடைக்கப்பட்ட இடத்தில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அதில் கொள்ளையனின் ஒரு கைரேகை பதிவாகி இருந்தது. அந்த கைரேகையை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×