search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகர்கோவிலில் போதை ஊசி மருந்து விற்ற 2 பேர் கைது

    நாகர்கோவிலில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போதை ஊசி மருந்து விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் இளைஞர்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் போதை மருந்து விற்பனை நடப்பதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தது. போதை மருந்து விற்பனை குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வடசேரி பஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி, செட்டிக்குளம், ராமன்புதூர் பகுதிகளில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் சந்தேகப்படும் பகுதிகளில் ரோந்து சுற்றியும் வந்தனர். நாகர்கோவில் ஐ.எஸ்.ஆர்.ஓ. காலனி அருகே போலீசார் ரோந்து சென்ற போது அங்கு 2 வாலிபர்கள் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தனர்.

    நேசமணி நகர் போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து அவர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 15 போதை ஊசி மருந்துகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த போதை ஊசி மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகு விளையை சேர்ந்த சேகர் (வயது 42), வெட்டூர்ணிமடம் ஜோஸ்வா தெருவை சேர்ந்த ஆரோன் ராஜா (33) ஆகியோர் ஆவர். இவர்களில் சேகர் ஏற்கனவே போதை மருந்து விற்பனை செய்த வழக்கில் கைதானவர். இவர் மீது கோட்டார், வடசேரி மற்றும் நேசமணி நகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.

    கைதான இருவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.5 ஆயிரமும் கைப்பற்றப்பட்டது. இவர்கள் போதை மருந்துகளை வாலிபர்களுக்கு விற்பனை செய்ததையும் அறிந்து கொண்ட போலீசார், இதனை எங்கிருந்து வாங்கி வருகிறார்கள்? சப்ளை செய்யும் நபர் குறித்தும் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் குமரி மாவட்டத்திற்கு போதை ஊசி மருந்துகளை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×