
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 2012-ம் ஆண்டு 13 பள்ளி காவலர்கள், 25 துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. துப்புரவு ஊழியர்கள் பணிக்கு 116 பேர் விண்ணப்பித்த நிலையில் 65 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
43 பேர் பள்ளிக்காவலர் பணிக்கு விண்ணப்பித்ததில் 30 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 8 பேரும், 20 துப்புரவு ஊழியர்களும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
எம்.எல்.ஏ.க்கள், கல்வி அதிகாரிகள் சிபாரிசு அடிப்படையில் இந்த நியமனம் நடைபெற்று உள்ளதாகவும், இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அந்த பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் நேர்காணலில் பங்கேற்ற கணேசன் மதுரை ஐகோர்ட்டில் 2012-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரிக்க கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. அவர்கள் விசாரணை நடத்தி 2011-16ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.க்களாக இருந்த முத்துராமலிங்கம் (திருமங்கலம்), கதிரவன் (உசிலம்பட்டி), ஏ.கே.போஸ் (மதுரை வடக்கு), தற்போதைய கல்வித்துறை இணை இயக்குநர் நாகராஜமுருகன், முன்னாள் கல்வி அதிகாரிகள் சந்தானமூர்த்தி, ராஜ ராஜேஸ்வரி, கண்ணப்பன், மணி, தேவராஜ் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஏ.கே.போஸ், அதிகாரிகள் மணி, தேவராஜ் ஆகியோர் இறந்து விட்டனர்.
ஊழல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கல்வி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.