search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    தேச துரோக வழக்கில் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை - வைகோ

    தேச துரோக வழக்கில் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே தி.மு.க. தலைவர்மு.க.ஸ்டாலின் என்னிடம் நீங்கள் மாநிலங்களவை உறுப்பினருக்கு போட்டியிட்டால் மட்டுமே ஒரு சீட் வழங்கப்படுவதாக தெரிவித்தார். அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு இடமும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒரு இடமும் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.

    ஒப்பந்தத்தின்படி எனது கட்சி செயற்குழு கூட்டத்தை கூட்டி நான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஒருமனதாக தேர்வு செய்தனர். இந்த சூழ்நிலையில் என் மீது தேச துரோக வழக்கில் கடந்த 5-ந் தேதி தண்டனை விதிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    சுதந்திரத்துக்கு முன்பு மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர் ஆகியோருக்கு மட்டுமே இந்த பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. திலகர் பர்மா சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திரத்துக்கு பின் இந்த சட்டத்தை நீக்கும்படி ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட இந்த சட்டம் இந்தியாவுக்கு தேவையற்றது என்று தெரிவித்தனர். அதன் பிறகும் கூட 194 (ஏ) என்ற இந்த சட்டம் நீக்கப்படவில்லை ஆனால் இந்தியாவில் இன்று வரை இந்த சட்டத்தின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை.

    பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனையெல்லாம் உணர்ந்து எனக்கு தண்டனை கிடைக்காது என நம்பினேன்.

    இந்தியாவில் பொடோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் எம்.பி. நான்தான். அதே போல் தேச துரோக வழக்கிலும் தண்டிக்கப்பட்டவன் நான தான். இந்தியாவில் மகாத்மா காந்தி உருவத்தை செய்து அதனை சுடுபவர்களும், நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைப்பவர்களும் தேச பக்தர்கள் போல சித்தரிக்கப்படுகின்றனர்.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(1)-ன் படி பெண்களை கேலி செய்தல், மத பிரச்சினையை தூண்டுதல், 8(2)-ன் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அதே போல் 8(3)-ன்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

    தண்டனை விதிக்கப்பட்ட பிறகு கடந்த 5-ந் தேதி அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஒரு வேளை எனது மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கூறினேன். அதன்படியே தி.மு.க. சார்பில் என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்துள்ளார். எனது மனு ஏற்றுக் கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    நாளை வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் போது என்னால் கலந்து கொள்ள முடியாது. ஏன் என்றால் நாளை அதே கோர்ட்டில் மற்றொரு வழக்குக்காக நான் ஆஜராக வேண்டி உள்ளது. எனது சார்பில் வக்கீல் தேவதாஸ் கலந்து கொள்வார். எனது மனு ஏற்கப்பட்டால் தி.மு.க. வேட்பாளர் இளங்கோ தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×