search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர்மின் கோபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த படம்
    X
    உயர்மின் கோபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த படம்

    உயர்மின் கோபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ராமநாதபுரத்தில் 2 நாட்களாக நீடித்த மின்தடை

    உயர்மின்கோபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மின்தடை நீடித்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் நகர் மற்றும் தேவிபட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3-ந்தேதி இரவு 7 மணி அளவில் திடீரென மின் தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிடும் என்று நம்பி இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பலமணி நேரம் ஆன பின்னரும் ராமநாதபுரம் நகருக்கும், அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கும் மின்சாரம் வராததால் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.

    வீட்டில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் இயங்கவில்லை, செல்போன்களை சார்ஜ் செய்ய முடியவில்லை, இன்வெர்ட்டரில் சேமித்த மின்சாரமும் தீர்ந்து போனது, குடிநீர் மோட்டார்களை இயக்க முடியவில்லை, வீடுகளில் ஆழ்குழாய் கிணறுகளுக்கான மோட்டார்களை இயக்க முடியவில்லை, பள்ளிக்கூடங்களில் இருந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் இரவு நேரத்தில் பாடம் படிக்க சிரமம் அடைகிறார்கள், இல்லத்தரசிகள் டி.வி. சீரியல் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்கள், சுட்டெரித்து வரும் வெயிலின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏ.சி. எந்திரத்தையும் இயக்க முடியவில்லை என்று மின்சாரம் இல்லாததால் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சிறிய தொழிற்சாலைகளிலும் கடந்த 2 நாட்களாக பணிகள் முடங்கின. பஜார்கள் இரவு 7 மணிக்கே இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    இவ்வளவு நீண்ட நேர மின்தடை பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் ஏற்பட்டுள்ளது என மக்கள் கூறுகிறார்கள். அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி மின்வாரியத்தினரிடம் விசாரித்தபோது, உயர்மின் கோபுரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்தது தெரியவந்தது.

    அதாவது, வழுதூர் மற்றும் ஆர்.எஸ்.மடை துணை மின்நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உயர்அழுத்த மின்சாரம் வினியோகமாகும் 88-வது உயர்மின் கோபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியவந்தது. இந்த மின்கம்பி அறுந்ததும் அதனை இழுத்து கட்டி வைத்துள்ள கண்ணாடி காப்பான் (இன்சுலேட்டர் டிஸ்க்) பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

    இதனால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் வினியோகமாகும் பகுதிகளில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழுதூர் உயர்மின்கோபுர பணியாளர்கள் விரைந்து சென்று இரவு முழுவதும் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிராக்டர்கள் உதவியுடன் மின்கம்பியை இழுத்து கட்டி புதிய கண்ணாடி பீங்கானை பொருத்தினர். இந்த பழுதினை சரிசெய்து முடிக்கும் நிலையில் சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள உயர்மின்கோபுரத்திலும் கண்ணாடி பீங்கான் வெடித்து சிதறி மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அங்கு சென்றும் மின் பணியாளர்கள் அந்த பழுதையும் சரிசெய்தனர்.

    இந்த பணிகள் முடிவடைந்து நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஒரு சில பகுதிகளில் மின்வினியோகம் சீரானது. பின்னர் படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக மதியம் 12.30 மணியளவில் மின் வினியோகம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இதுவும் ஒரு சில மணி நேரங்களில் துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து மின்தடை நீடித்தது.

    தொடர்ந்து 2 நாட்களாக மின் வினியோகம் இல்லாததால் இரவில் விடிய விடிய கடும் வெப்பத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அவதியடைந்தனர். பெரும்பாலானோர் காற்றுக்காக வெளியில் தூங்கியதை காணமுடிந்தது.

    மின்கம்பி அறுந்ததற்கான காரணம் குறித்து மின்வாரியத்தினரிடம் கேட்டபோது, கடும் உப்புக்காற்று காரணமாக மின்கம்பியில் அரிப்பு ஏற்பட்டு, அதனை பாதுகாக்கும் கண்ணாடி பீங்கான் வெடித்து சிதறுவதாகவும், இதற்கு மாற்றாக உப்புக்காற்று அரிக்காத வகையில் உயர்தர நவீன பாலிமர் பீங்கான் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இன்னும் ஒருமாத காலத்திற்குள் அனைத்து உயர்மின் கோபுரங்களிலும் இப்பணிகள் நிறைவடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே பழுதை சரிசெய்யும் பணியில் மின்வாரிய உயர் அதிகாரிகள் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். அந்த பணிகளை கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டு, துரிதமாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள நவாஸ்கனி எம்.பி. ராமநாதபுரத்தில் மின் தடையால் அனைவரும் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து இதில் துரிதமாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் வீரராகவராவ் மற்றும் மின்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். தீவிர நடவடிக்கையை தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் பல இடங்களுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×