search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலைக்குள் புகுந்து மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது

    வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலைக்குள் புகுந்து மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே ராமநாதபுரத்தில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வெங்கடேசன் (வயது 40) என்பவர் மானேஜராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாலை வெங்கடேசன் தொழிற்சாலையில் பணியில் இருந்தார். அப்போது காரில் 3 பேர் கொண்ட கும்பல் வந்தது.

    அவர்கள் தொழிற்சாலை மானேஜர் வெங்கடேசனிடம் இனிமேல் தொழிற்சாலையில் ஆட்களை வேலைக்கு சேர்த்தல் உள்ளிட்ட எந்த பணிகள் இருந்தாலும் எங்களிடம் தான் காண்டிராக்டு விட வேண்டும்.

    அப்படி இல்லை என்றால் மாதா மாதம் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மாமூலாக தர வேண்டும். அப்படி தராவிட்டால் இப்பகுதியில் தொழிற்சாலை நடத்த முடியாது. காலி செய்து விடுவோம் என அந்த கும்பல் மிரட்டியது.

    ஒரு கட்டத்தில் அந்த கும்பல் தடியை எடுத்து மானேஜரை தாக்கவும் பாய்ந்தது. இதனால் பயந்து போன மானேஜர் வெங்கடேசன் வில்லியனூர் போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார், ஏட்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் மாமூல் கேட்டு மிரட்டிய கும்பலை சேர்ந்த ஒருவன் தப்பி ஓடிவிட்டான். மற்ற 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தொண்டமாநத்தத்தை சேர்ந்த ஓவியன் என்ற ஆறுமுகம் (26) மற்றும் கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த வினோத் (25) என்பதும், தப்பி ஓடியவன் கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த பாரதி என்பதும் தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் பிரபல ரவுடிகள் என்பதும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்து ஓவியன், வினோத் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மிரட்டலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய பாரதியை தேடி வருகிறார்கள்.

    தொழிற்சாலைக்குள் புகுந்து மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டிய சம்பவம் வில்லியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×