search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.
    X
    மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.

    வைகோவுக்கு தண்டனை அளித்தது வருத்தமளிக்கிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    வைகோவின் பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாணவ- மணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவே குடும்ப கட்சிக்கான சிறந்த உதாரணம்.

    இளைஞரணி செயலாளர் பதவிக்கு தி.மு.க.வில் தகுதியானவர்கள் பலர் இருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதி அடிப்படையில் அவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது.

    இதை தி.மு.க.வினர் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்? என தெரியவில்லை. வாரிசு அரசியல், குடும்ப கட்சிக்கு தி.மு.க.வே. உதாரணம்.

    பிரதமர் மோடி சாமானியர். எனவே அரசின் பட்ஜெட் ஏழை, எளியவர்களுக்கென தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பெட்ரோலுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதை எதிர்க்கக்கூடாது.

    ஏனெனில் அதன் மூலம் தான் சாலை மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முடியும். நாட்டின் வளர்ச்சிக்காக சில வி‌ஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    வைகோ

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நமது பகுதியை சேர்ந்தவர். சிறந்த போராளி. தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அவரது பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இது எனது தனிப்பட்ட கருத்து.

    சுயநிதி வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசின் மடிக்கணினி கிடைக்க பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    டி.டி.வி. தினகரன் தனிமையில் உள்ளார். அவருக்கு கார் ஓட்டும் டிரைவர் கூட விரைவில் அவரை விட்டு வெளியேறி வந்து விடுவார்.

    டி.டி.வி. தினகரனை பொருத்தவரையில் எல்லாமே அவரை சுற்றியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்சியை கொண்டுபோக நினைத்து டிடிவி தினகரன் செயல்பட்டார்.

    முதல்வர் எடப்பாடியார் அதை தடுத்து கட்சியை காப்பாற்றினார். சதியை முறியடித்து அம்மாவுடைய ஆட்சியை நிலைநாட்டினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×