search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
    X
    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தமிழக எம்பிக்கள் மக்களவையில் பேச வேண்டும்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

    தமிழகத்தில் உள்ள 38 எம்.பி.க்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு அவை உண்பதற்கு விரும்பிய பயிர்கள் பயிர் செய்யவும், தண்ணீர் தொட்டி அமைக்கவும், மின்சாரம் இல்லாத பகுதிகளில் சோலார் அமைத்து அதன் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    மத்திய பட்ஜெட் குறித்து முதல்வரும், துணை முதல்வரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களுக்கான பட்ஜெட் என்று அவர்கள் தெரிவித்த பிறகு நான் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர்களுடைய கருத்துதான் என்னுடைய கருத்தும்.

    பெட்ரோல் பங்க்

    பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். தமிழகத்தில் உள்ள 38 எம்.பி.க்களும் இது குறித்து பாராளுமன்றத்தில் பேச வேண்டும். தமிழக அரசு சார்பிலும் இது குறித்து வலியுறுத்தப்படும்.

    எல்லோருக்கும் ஏற்பட்ட உணர்வுதான் எங்களுக்கும் ஏற்படுகிறது. விலையை குறைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைப்பதற்கு தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்கும் போது இது குறித்து பேசுவார்.

    மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆனைமலை சரணாலயம், கொடைக்கானல் புலிகள் சரணாலயம் இணைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×