search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் அடைந்த ஆரோக்கியம்
    X
    காயம் அடைந்த ஆரோக்கியம்

    கோவில் திருவிழாவில் மோதல்- போலீசார் தாக்கியதில் வாலிபர்கள் படுகாயம்

    திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போலீசார் தாக்கியதில் 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் கடந்த வாரம் ஒரு பிரிவினர் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். திருவிழாவில் ஆடுகளை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். கோட்டாட்சியர் ஜீவா மற்றும் போலீசார் இரு தரப்பு மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் சுமூகமாக திருவிழாவை நடத்திக் கொள்ளவும், போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவும் அறிவுறுத்தினார். இருந்தபோதும் நேற்று முன்தினம் நடந்த திருவிழாவின் போது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று இரவு திருவிழா நிறைவடையும் சமயத்தில் ஒரு தரப்பினர் மீண்டும் தகராறு செய்தனர். இது கோஷ்டி மோதலாக மாறியது. இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்புக்கு இருந்த போலீசார் 5 பேர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதில் 2 பேரை கடுமையாக தாக்கியதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் நடு வழியிலேயே இறக்கி விட்டு சென்று விட்டனர். இதில் காயமடைந்த சூசை மகன் ஆரோக்கியம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு நபரான அந்தோணி திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் தகராறு செய்தவர்களை கைது செய்யாமல் விழா நடத்தியவர்களை கைது செய்து அவர்களை கடுமையாக தாக்கிய போலீசாரை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் பெருமாள் கோவில் பட்டி பிரிவில் இன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியலுக்கு முயன்றனர். போலீசார் அவர்களை சமரசம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 3 வாகனங்களில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவர்கள் காயம்பட்ட ஆரோக்கியத்துக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பான சூழல் உருவானது.

    நகர் வடக்கு போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பெருமாள் கோவில்பட்டியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×