search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை தமிழில் வெளியிட சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழில் வெளியிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அவர் கூறியதாவது:-

    “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. என்றாலும் தற்போது இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் தான் வெளியிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழி அதில் இடம் பெறவில்லை என்பது ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

    செம்மொழியாம் மூத்த தமிழ் மொழி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு மொழியாக இருக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் இதே சட்டசபையில் 6.2.2016 அன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். 8.12.2016 அன்று ஜனாதிபதியிடம் அந்த தீர்மானத்தை கொடுத்து வலியுறுத்தினார்.

    எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழில் வெளியிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக கொண்டு வர தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

    சிவி சண்முகம்


    உச்சநீதிமன்ற தீர்ப்பை 5 மொழிகளில் மொழி பெயர்க்கபோவதாக தமிழக அரசுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. பத்திரிகைகளிலும், ஊடகங்களில்தான் இந்த செய்திகள் வந்தன. உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வர வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

    முதல் கட்டமாக இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாம், மராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த வழக்குகள் அதிகளவு இருப்பதால் முதல் கட்டமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சமீபத்தில் பேசும்போது, “அனைத்து மாநில மொழிகளிலும் தீர்ப்புகளை வெளியிட ஏற்பாடு செய்யப்படும்” என்று கூறி இருக்கிறார். தமிழிலும் தீர்ப்பு வர வேண்டும் என்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி வற்புறுத்தப்படும்.

    உச்சநீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று 2013-ம் ஆண்டு நீதிபதிகள் மாநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்தினார். பின்னர் 2015-ம் ஆண்டிலும் நடந்த மாநாட்டிலும் அவர் வற்புறுத்தினார். இது குறித்து மத்திய அரசுக்கு 4 முறை வற்புறுத்தி இருக்கிறோம். தொடர்ந்து தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர இந்த அரசு முயற்சி எடுக்கும்.

    மு.க.ஸ்டாலின்:- ஆளும் கட்சி, எதிர்கட்சி அனைத்துமே உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழில் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஒத்த கருத்து கொண்டதாக இருக்கின்றன. எனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    அமைச்சர் சி.வி.சண்முகம்:- அனைத்து மொழிகளிலும் தீர்ப்பு நகல் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சொல்லி இருக்கிறார். எனவே தீர்மானம் கொண்டு வந்தால் அவருக்கு அழுத்தம் கொடுத்தது போல் ஆகிவிடும். எனவே சற்று பொறுமையாக இருந்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். தமிழிலும் தீர்ப்பு நகல் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    தாமதம் ஆனால் முதல்வருடன் கலந்து பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×