search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் கொள்ளையனிடம், ரூ.2½ லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர்

    சென்னையில் கொள்ளையனின் ஏ.டி.எம்-மில் இருந்து ரூ.2½ லட்சம் பணத்தை பறித்த பெண் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னையில் கடந்த மே மாதம் ரெயிலில் கொள்ளையடிக்கும் சாகுல் அமீது என்ற வாலிபர் கைதானார்.

    கேரளாவை சேர்ந்த அவர் ரெயில்களில் ஏ.சி. பெட்டியில் டிக்கெட் எடுத்து பயணிகள் போல பயணம் செய்ததும் அப்போது நள்ளிரவில் மற்ற பயணிகளின் உடமைகளை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

    ரெயில்வே போலீசிடம் சிக்கிய சாகுல் அமீதிடம் இருந்து 110 பவுன் நகை மீட்கப்பட்டன.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்ந்து ரெயில்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் சாகுல் அமீதிடம் அதிரடியாக விசாரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையடித்த நகைகளை விற்று பணமாக்கி வங்கிகளில் அவர் போட்டு வைத்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பணத்தை எடுப்பதற்காக 15 வங்கிகளில் அவர் கணக்கு வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகளும் சாகுல் அமீதிடம் இருந்தன.

    இந்த நிலையில் போலீசாரிடம் சாகுல் அமீது தனது 2 கார்டுகள் மாயமாகி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக ரெயில்வே போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

    சாகுல் அமீதிடம் விசாரணை நடத்திய போலீசார் அந்த கார்டுகளை எடுத்து பயன்படுத்தினார்களா? என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. இதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் 2 கார்டுகளையும் பயன்படுத்தி பணம் எடுத்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    கொள்ளையன் சாகுல் அமீதின் வங்கி கணக்கில் இருந்து அவனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பெண் இன்ஸ்பெக்டர் ரூ.2½ லட்சம் பணம் எடுத்துள்ளார். அவர் பணம் எடுத்தது தொடர்பாக வீடியோ காட்சிகளும் கிடைத்துள்ளன.

    மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் இருந்து அவர் பணத்தை எடுத்துவிட்டுவெளியில் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    கொள்ளையன் கைதான போது ரெயில்வேயில் பணியாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் தற்போது சென்னை மத்திய குற்றப் பிரிவில் பணியாற்றி வருகிறார். மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலேயே இயங்கி வருகிறது.

    நேற்று மாலை இந்த தகவல் வெளியானதும் மத்திய குற்றப்பிரிவிலும் பரபரப்பு நிலவியது. போலீஸ் வட்டாரத்திலும் பெண் இன்ஸ்பெக்டரின் செயல் பற்றி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×