search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    திருவாரூர் அருகே கோவிலில் சாமி சிலைகளை உடைத்த 3 சிறுவர்கள் கைது

    திருவாரூர் அருகே மது அருந்துவதற்காக கோவிலில் சாமி சிலைகளை உடைத்து திருட முயன்ற 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள தொழுவனங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, கிராம மக்கள் கடந்த 6 மாதமாக திருப்பணி வேலைகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் இருந்த சுவாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கோவிலில் இருந்த பெரியநாயகி அம்மன், முருகன், காலபைரவர் உள்ளிட்ட சுவாமி சிலைகளும் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள கோபுரத்திலும் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

    இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் கிராம மக்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், கோவில் ஊழியர்கள், மற்றும் குடமுழுக்கு பணியில் ஈடுபட்டு வரும் ஸ்தபதிகள், கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர் மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களின் பதிவாகியுள்ள பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலில் 3 சிறுவர்கள் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தனுஷ், சத்திய சீலன், மற்றும் ஜெகநாதன் ஆகியோர் சாமி சிலைகளை உடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 மாணவர்கள் மீதும் வழக்குபதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கோவிலில் இருந்த சிலைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் மது குடிக்கலாம் என்று நினைத்து இந்த செயலில் ஈடுபட்டதாக பிடிபட்ட 3 மாணவர்களும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கைதான 3 மாணவர்களையும் போலீசார் தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

    Next Story
    ×