search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராணி
    X
    மகாராணி

    தூத்துக்குடி இளம்பெண் கொலையில் வாலிபருக்கு வலைவீச்சு

    தூத்துக்குடியில் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தப்பி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரம் பாரதிநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் நடேஷ் என்ற நடேசன் (வயது 34). இவர் உடன்குடி அருகே கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் என்ஜினீயராக உள்ளார். இவருடைய மனைவி மகாராணி (28) இவர்களுக்கு விம்ரித் (5) என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் நேற்று காலையில் நடேசன் வேலைக்கு சென்று விட்டார். மகாராணி அருகே உள்ள பள்ளிக்கூடத்தில் மகனை விட்டு விட்டு வீடு திரும்பினார். அதன் பின்னர் மதியம் 1 மணி அளவில் அருகே உள்ள ராஜூவ்நகரில் வசித்து வரும் மகாராணியின் தந்தை உலகமுத்து தனது மகளை பார்க்க வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மகாராணி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உலகமுத்து, மகாராணியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மகாராணி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தடயவியல் துறை இணை இயக்குனர் கலாலட்சுமி தலைமையில் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து வேகமாக ஓடி, அருகே உள்ள எஸ்.எம்.பி.நகர் வரை சென்றது. பின்னர் திரும்பி வந்து விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வீட்டில் மகாராணி மட்டும் இருப்பதை அறிந்த மர்ம நபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அவர் கொண்டு வந்த கூர்மையான ஆயுதத்தால் மகாராணியை கழுத்தை அறுத்துக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய மர்மநபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இது குறித்து விசாரணை நடத்த 2 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தூத்துக்குடி அரிராம்நகரை சேர்ந்த சுப்புராஜ் மகன் இளவரசன் (வயது 21) என்பவர் நடேசன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. எனவே அவரை பிடித்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து இளவரசனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    Next Story
    ×