search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலாளர் கே சண்முகம்
    X
    தலைமை செயலாளர் கே சண்முகம்

    தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் பதவியேற்றார்

    தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் தலைமைச்செயலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
    சென்னை:

    தமிழகத்தின் 45-வது தலைமைச் செயலாளராக, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி நியமிக்கப்பட்ட கிரிஜா வைத்தியநாதன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து தமிழகத்தின்  புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றுக்கொண்டார்.  

    தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளர் ஆனார் சண்முகம்.  புதிய தலைமைச்செயலாளராக சண்முகம் பதவியேற்றதையடுத்து அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் கே.சண்முகம் 1960-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி பிறந்தார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அவரது சொந்த ஊராகும். வேளாண்மை கல்வியில் எம்.எஸ்சி. பட்டம் பெற்று உள்ளார்.

    பின்னர் ஐ.ஏ.எஸ். ஆன அவர் 1985-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி தமிழக அரசு பணியில் சேர்ந்தார்.

    விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். சேரன்மகாதேவியில் பயிற்சி உதவி கலெக்டராக பணியை தொடங்கிய இவர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர் மற்றும் கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து உள்ளார்.

    2010-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். திறமையான பணியின் காரணமாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் அவர் நிதித்துறை செயலாளராக நீடித்தார். அந்த வகையில் கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய 4 முதல்-அமைச்சர்களிடத்திலும் பணியாற்றி நற்பெயரை ஈட்டியிருப்பவர் அவர்.

    நிதித்துறையில் அவர் பெற்ற அனுபவம் காரணமாக அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சிறப்பாக செயல்படுபவராக திகழ்ந்தார். நிதி நெருக்கடி காலங்களிலும் நிதிச்சுமையை குறைக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியவர் கே.சண்முகம்.
    Next Story
    ×