search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயதாரணி
    X
    விஜயதாரணி

    கராத்தே தியாகராஜன் புகாருக்கு விஜயதாரணி எம்.எல்.ஏ. பதில்

    பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கராத்தே தியாகராஜன் கூறியது குறித்து, விஜயதாரணி எம்.எல்.ஏ. தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கராத்தே தியாகராஜன் சமீபத்தில் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

    கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கராத்தே தியாகராஜன் நேற்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து கராத்தே தியாகராஜன் நிருபர்களிடம் கூறும்போது, கட்சியில் இருந்து என்னிடம் விளக்கம் கேட்காமல் நீக்கிவிட்டனர். பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய விஜயதாரணி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் என்மீது மட்டும் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

    கராத்தே தியாகராஜன்

    கராத்தே தியாகராஜன் கூறியது பற்றி விஜயதாரணி எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கராத்தே தியாகராஜன், எனது பேட்டியை முழுமையாக பார்க்காமல் பேசக்கூடாது. அந்த பேட்டியில் நான் பிரதமரை பற்றி என்ன கூறினேன் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் நான் பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் காங்கிரசை விமர்சித்து பேசிவருகிறார். காங்கிரசுக்கு தொடர்ந்து அறிவுரை கூறுகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைகளை எங்கள் கட்சி தலைவர் ராகுல் காந்தி பார்த்து கொள்வார். நீங்கள் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள் என்றுதான் கூறியிருந்தேன்.

    நான் பேசியது பற்றி கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் விளக்கம் அளித்து விட்டேன். இதுபோல கட்சியின் மேலிட பார்வையாளர் முகுல்வாஸ்னிக், தேசிய பார்வையாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோருக்கும் தெரிவித்து விட்டேன். கட்சியை பலவீனப்படுத்தும் எந்த கருத்தையும் பேசக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டே நான் பேசுவது வழக்கம்.

    எனது விளக்கம் சரியாக இருந்ததால் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். இது போல கராத்தே தியாகராஜனும் கட்சிக்கு உரிய விளக்கம் அளித்து விட்டு கட்சி பணியில் தொடரட்டும்.

    கராத்தே தியாகராஜன் உண்மையான காங்கிரஸ்காரர். கட்சிக்கு சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். அவர் கட்சிக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.

    மேலும் அவர் நான் கூறியதை முழுமையாக தெரிந்து கொண்ட பின்பே என்னை பற்றி பேசவேண்டும் என்று விரும்புகிறேன்.

    ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம்.

    தமிழகத்தில் 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு அளிக்க இருக்கிறது. அந்த தீர்ப்பு அரசுக்கு எதிராக இருந்தால், இந்த ஆட்சிக்கு ஆபத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×