search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நினைவு இல்லமாக மாறப்போகும் போயஸ் கார்டன் வீடு.
    X
    நினைவு இல்லமாக மாறப்போகும் போயஸ் கார்டன் வீடு.

    ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றும் பணி தொடக்கம்

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றும் பணி தொடங்கியது. நிலத்தை கையகப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் தான் கழித்தார்.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தபோதும் பல முக்கிய முடிவுகளை இந்த வீட்டில் இருந்த போதே எடுத்திருக்கிறார். யாரும் நெருங்க முடியாத கோட்டையாக இருந்த போயஸ் கார்டன் வேதா நிலையம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு களைஇழந்து போனது.

    அதுவரை, ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை சென்று பார்க்க முடியாதா? என்று ஆர்வத்தில் இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், அவர் இறப்புக்கு பிறகு வீட்டிற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வந்தனர். அந்த அனுமதியும் குறுகிய காலம் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தது.

    இந்தநிலையில், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எழத் தொடங்கியது. அதை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசும் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவித்தது. தற்போது, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

    முதற்கட்டமாக, நில எடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக, சென்னை கிண்டியில் உள்ள நில எடுப்பு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சார்பில் பத்திரிகைகளில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், இந்த நில எடுப்பு தொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருப்பின் நிலத்தின் சார்புடைய நபர் தமிழ்நாடு அரசிதழ் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்கு உள்ளாக சென்னை கிண்டியில் உள்ள நில எடுப்பு அலுவலர் மற்றும் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை அவரது தாயார் சந்தியா 1967-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்துக்கு வாங்கினார். இன்றைக்கு அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×