search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை  பெய்ய வாய்ப்பு
    X

    தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

    வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மழை பெய்து வருகிறது. இதர மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்கிறது. சென்னையிலும் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது.

    இந்தநிலையில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.



    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    நிலவி வரும் வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசும்.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, வேலூர் மாவட்டம் கலவையில் அதிகபட்சமாக தலா 6 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

    திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், தரமணி, சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. கேளம்பாக்கம், காரைக்கால், வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்திருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×