search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகிலன் மாயமான வழக்கில் ரகசிய அறிக்கை - ஐகோர்ட்டில் சிபிசிஐடி தாக்கல்
    X

    முகிலன் மாயமான வழக்கில் ரகசிய அறிக்கை - ஐகோர்ட்டில் சிபிசிஐடி தாக்கல்

    சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் ரகசிய அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஆவண படத்தை முகிலன் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் வெளியிட்டார்.

    ஆவணப்படத்தை வெளியிட்ட பின்னர் சென்னையில் இருந்து ரெயிலில் மதுரைக்கு சென்றபோது அவர் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் முகிலனை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஹென்றி டிபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மாயமான முகிலன் குறித்து முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் ஐகோர்ட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பான ரகசிய விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல் குமார் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சுதா ராமலிங்கம், ‘முகிலன் வட இந்தியாவில் இருப்பதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. முகநூல் பக்கத்தில் முகிலன் எங்கே? என்ற பதிவில், ராஜபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது கவுஸ், ‘சமாதி’ என்று பதில் போட்டுள்ளார். இது எங்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என்றார்.

    பின்னர், சி.பி.சி.ஐ.டி., தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் விசாரணை குறித்த புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை படித்து பார்த்த நீதிபதிகள், “போலீசாரின் புலன் விசாரணை சரியான திசையில் செல்கிறது. விசாரணை புதிய கோணத்தில் நடந்து வருவதாகவும், ஒவ்வொரு முறையும் புதுப்புது தகவல்கள் கிடைத்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

    எனவே, இந்த சூழ்நிலையில் விசாரணை விவரங்களை வெளியிட முடியாது. இந்த வழக்கு விசாரணையை 8 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×