search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளையில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் திருப்பூரில் கைது
    X

    நகை கொள்ளையில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் திருப்பூரில் கைது

    7 கிலோ தங்க நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் திருப்பூரில் பதுங்கி இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    கோவையில் இருந்து திருவாரூருக்கு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி ஆம்னி பஸ் சென்றது. இந்த பஸ்சில் 7.2 கிலோ நகையுடன் கோவையை சேர்ந்த துவாரகநாத், நாகராஜன் ஆகியோர் பயணம் செய்தனர். பஸ் கரூர் அருகே லாலாபேட்டையில் சென்ற போது  காரில் வந்து வழிமறித்த ஒரு கும்பல் தாங்கள் வருமான வரி அதிகாரிகள் என கூறி இருவரிடமும் இருந்த 7.2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக லாலாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் வருமான வரித்துறையினர் தங்கத்தை பறிமுதல் செய்யவில்லை. கொள்ளை கும்பல் தான் அதனை கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கோவை மரக்கடையை சேர்ந்த முகமது ரபீக் (40) என்பவரும் ஒருவர் ஆவார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முகமது ரபீக் ஆஜராகவில்லை. அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. 

    இதனை தொடர்ந்து முகமது ரபீக்கை லாலாபேட்டை போலீசார் தேடி வந்தனர். அவர் திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இது குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று முகமது ரபீக்கை கைது செய்தனர். பின்னர் லாலாபேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.         
    Next Story
    ×