search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து கழகங்களுக்கு 400 புதிய பஸ்கள்
    X

    போக்குவரத்து கழகங்களுக்கு 400 புதிய பஸ்கள்

    அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 400 புதிய பஸ்கள் வழங்கப்பட உள்ளன. இதில் 200 பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு வழங்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 316 புதிய பஸ்கள் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டன. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 100 நவீன பஸ்கள் வழங்கப்பட்டன. இவை தவிர மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கும், விரைவு போக்குவரத்து கழகத்துக்கும் புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன.

    தற்போது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 110 வழித்தடங்களில் 675 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கிறார்கள். மற்ற போக்குவரத்து கழகங்களிலும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.

    தற்போது அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 400 புதிய பஸ்கள் வழங்கப்பட உள்ளன. இதில் 200 பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு வழங்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இவை அதிக பயணிகள் செல்லும் இடங்களுக்கும், கேரளாவுக்கும் இயக்கப்பட உள்ளன. இவை சொகுசு பஸ்களாகும்.

    200 பஸ்கள் மற்ற 5 போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்வற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. எந்தெந்த வழித்தடங்களில் எத்தனை புதிய பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் தெரிய வரும். புதிய பஸ்களை மக்கள் தேவையை கருத்தில் கொண்டு விரைவில் இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×