search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - நெம்மேலியில் புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் எடப்பாடி பழனிசாமி
    X

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - நெம்மேலியில் புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் எடப்பாடி பழனிசாமி

    சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
    சென்னை:

    சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தினமும் 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 10 ஆண்டுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வட சென்னை பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியிலும் 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கிருந்து தென்சென்னை பகுதியான திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கு தினமும் 80 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த 2 திட்டத்துக்கும் ரூ.1140 கோடி வரை செலவானது.



    இப்போது சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், கடல் நீரை குடிநீராக்கும் மேலும் ஒரு திட்டத்தை கொண்டு வர முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நெம்மேலியில் கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. புதிய ஆலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த புதிய திட்டத்தின் மூலம் தென்சென்னை பகுதியில் உள்ள சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

    Next Story
    ×