search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு- தென்மாவட்ட ரெயில்களில் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
    X

    தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு- தென்மாவட்ட ரெயில்களில் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன

    வெளியூர் செல்லும் மக்களுக்கான தீபாவளி ரெயில் முன்பதிவு ரெயில்வே கவுண்டர்களில் இன்று தொடங்கியது. முக்கிய ரெயில்களில் சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையின்போது, சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள்  தங்கள் சொந்த ஊர்களுக்கு  செல்வது வாடிக்கையான ஒன்றாகும். இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை. அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலருக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக இருக்கும். எனவே அவர்கள் வெள்ளிக்கிழமையே தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு கிளம்புவார்கள்.



    இதன்படி அக்டோபர் 25-ஆம் தேதி முதல் தொலைதூர ரெயில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் அதற்கான முன்பதிவை இன்று காலை 8 மணிமுதல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25- ஆம் தேதியின் பயணத்துக்கு இன்னும் 120 நாட்கள் உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர்.  நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு  துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன. பல  முக்கிய ரெயில்களில் காத்திருப்பு பட்டியலில் கூட முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதேபோல் அக்டோபர் 26ம் தேதி சனிக்கிழமை ஊருக்கு செல்ல விரும்புவோர் நாளை டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதே போன்று தீபாவளி அன்று (அக்டோபர் 27ம் தேதி) பயணம் செய்வதற்கு, ஜூன் 29ம் தேதி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.
    Next Story
    ×