search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கதமிழ்செல்வனை சேர்ப்பது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும்- ஜெயக்குமார்
    X

    தங்கதமிழ்செல்வனை சேர்ப்பது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும்- ஜெயக்குமார்

    அ.தி.மு.க.வில் தங்கதமிழ்செல்வனை சேர்ப்பது பற்றி கட்சியில் உள்ள அனைவரிடமும் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை :

    மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இணைபவர்களுக்கு யாரும் முட்டுக்கட்டை போடுவது கிடையாது. டி.டி.வி.தினகரன் யானையை பிடிக்கலாம் என்ற கனவில் பெரிய ‘பில்டப்’ கொடுத்தார். கடைசியில் ஓணானை கூட பிடிக்க முடியவில்லை. டி.டி.வி.தினகரன் நிலைமை தற்போது பரிதாபமாகிவிட்டது. தன்னை ‘ரிங் மாஸ்டர்’ ஆக நினைத்துக்கொண்டு எல்லோரையும் ஆட்டிப்படைக்க நினைத்தார்.

    அந்த ‘ரிங் மாஸ்டர்’ மீதே எல்லோரும் சீற ஆரம்பித்துவிட்டார்கள். ‘பில்டப்’ அதிக நாட்கள் நிலைத்ததாக வரலாறே கிடையாது. அ.ம.மு.க.வில் இருந்து பலரும் அ.தி.மு.க.வுக்கு வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். இணைபவர்களை பற்றி கட்சி முடிவு செய்யும். யாரையும் நிராகரிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினாரா? அதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடக்கிறதா?

    பதில்:- அ.ம.மு.க.வில் இருக்கும் 4 பேரும் டி.டி.வி.தினகரனிடம் இருந்து பிரிந்து வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். அவர்களை சேர்ப்பது பற்றி கட்சி முடிவு செய்யும்.

    கேள்வி:- தங்கதமிழ்செல்வனை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

    பதில்:- அதைப்பற்றி இப்போது சொல்ல முடியாது. தங்கதமிழ்செல்வன் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் சொல்லாமல் நான் எதுவும் சொல்ல முடியாது.



    கேள்வி:- அ.ம.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் திடீரென வெளியேறுவதற்கு காரணம் என்ன? அந்த கட்சி பலவீனமாக இருக்கிறதா?

    பதில்:- ஒரு கட்சி என்றால் கொள்கை, கோட்பாடு, லட்சியங்கள் இருக்க வேண்டும். இந்த மூன்றுமே இல்லாதவர்களுக்கு மூன்று கோடு உடைய பட்டை நாமம் தான் கிடைக்கும். அதுதான் டி.டி.வி.தினகரனுக்கு கிடைத்திருக்கிறது. பணத்தை வைத்து ஊரை வளைத்துவிடலாம் என்ற நினைப்புக்கு தமிழக மக்கள் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள்.

    கேள்வி:- அ.தி.மு.க.வில் தங்கதமிழ்செல்வனை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- உணர்வு அடிப்படையில் சில பேர் ஒட்டியிருக்கலாம். அவரை சேர்த்துக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து நான் கூட முடிவு செய்ய முடியாது. கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

    கேள்வி:- அ.தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தங்கதமிழ்செல்வனை மீண்டும் இணைத்தால், தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

    பதில்:- முதலில் தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.வுக்கு வருகிறேன் என்று சொல்லவேண்டும். அதை அவர் வெளிப்படையாக இன்னும் சொல்லவில்லை. வருகிறேன் என்று சொன்னால் கட்சி அவரை சேர்ப்பது குறித்து முடிவு செய்யும். கட்சி சேர்க்கவும் செய்யலாம். சேர்க்காமலும் இருக்கலாம். ஏனென்றால் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவு எடுக்கப்படும்.

    அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க. மீது தொடுத்த விமர்சனங்களை எடுத்து பார்த்தால் அனைவருக்கும் தெரியும். அவரே தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார்.

    இவ்வாறு ஜெயக்குமார் பதில் அளித்தார்.
    Next Story
    ×