search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய்ப்பு கிடைத்தால் சசிகலாவை சந்திப்பேன்: தங்கதமிழ்செல்வன்
    X

    வாய்ப்பு கிடைத்தால் சசிகலாவை சந்திப்பேன்: தங்கதமிழ்செல்வன்

    சசிகலாவின் நோக்கமே அ.தி.மு.க., இரட்டை இலையை மீட்க வேண்டும் என்பது தான். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்
    சென்னை :

    அ.ம.மு.க.வின் முன்னணி நிர்வாகியான தங்கதமிழ்செல்வனுக்கும், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தங்கதமிழ்செல்வன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பதிவு செய்யப்படவே இல்லை. அந்த கட்சிக்கு கொள்கை எதுவும் கிடையாது. தலைமையில் சில தவறுகள் இருக்கிறது. அதை மாற்றுங்கள் என்று சொன்னால் நடவடிக்கை எடுக்காமல் வாட்ஸ்-அப்பில் தவறான தகவல்களை பரப்புவது தலைமைக்கு அழகல்ல.

    என்னை ஓரங்கட்டுவதற்கான காரணம் தெரியவில்லை. எம்.எல்.ஏ. பதவி போய் 2 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் அடிமட்ட தொண்டனுக்கு என்ன நிலைமையாக இருக்கும். தனியாக முடிவெடுக்கிறார். அந்த முடிவு சரியில்லை என்றால் கோபித்து கொள்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்தோம். அந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அ.ம.மு.க. தொடங்கியதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அ.தி.மு.க., இரட்டை இலை ஆகியவற்றை மீட்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது.

    சிறையில் உள்ள சசிகலாவை, தினகரன் தான் சென்று பார்க்கிறார். நான் ஒரு முறை தான் சந்தித்தேன். அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். சசிகலாவின் நோக்கமே அ.தி.மு.க., இரட்டை இலையை மீட்க வேண்டும் என்பது தான்.

    அ.தி.மு.க.வில் இணைய சொல்லி யாரும் என்னை அணுகவில்லை. தி.மு.க. உள்பட எந்த கட்சியிலும் இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை. நீக்கினாலும் கவலையில்லை. எனக்கு எந்தவித அச்சுறுத்தலும் வரவில்லை. அச்சுறுத்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அரசியலில் இருந்து விலக மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    முன்னதாக அவர் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.ம.மு.க.வில் என்னை தவறாக சித்தரிக்கின்றனர். அதை தவறு என்று நான் கருதுகிறேன். செல்போனில் பேசுவதை பதிவு செய்வது ஒரு தலைவனுக்கு அழகில்லை.

    என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாய் தங்கதமிழ்செல்வன் அடங்கி விடுவார் என்று டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறார். அவர் எனக்கு சம்பளம் ஏதும் கொடுக்கிறாரா? அவருடைய பண்பாடு மிக மோசமாக இருக்கிறது.

    ‘ஒன் மேன் ஆர்மி’யாக அ.ம.மு.க.வில் வேலை செய்வதினால்தான் பாதி பேர் தற்போது வெளியே வந்துள்ளனர். இன்னும் முழுசாக வெளியே வந்துவிடுவார்கள். டி.டி.வி.தினகரனுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    என்னை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக கூறுகிறார். கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் அவசியமா?

    இவ்வாறு தங்கதமிழ்செல்வன் கூறினார்.

    முன்னதாக அவரிடம் நிருபர்கள் “அ.தி.மு.க.வில் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக இருக்கிறாரா?” என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு தங்கதமிழ்செல்வன், “இது ஊடகங்களாக கூறுவது” என்று பதில் அளித்தார்.
    Next Story
    ×