search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் அதிகரிப்பு: சென்னை-மதுரை பயண நேரம் குறைகிறது
    X

    எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் அதிகரிப்பு: சென்னை-மதுரை பயண நேரம் குறைகிறது

    சென்னை-மதுரை இடையே சுமார் 10 ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை நடைமுறைக்கு வரும்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 முதல் 30 நிமிடம் வரை பயண நேரம் குறைய உள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை வருகிற 1-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதில் சென்னை - மதுரை இடையே சுமார் 10 ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    புதிய கால அட்டவணை நடைமுறைக்கு வரும்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 முதல் 30 நிமிடம் வரை பயண நேரம் குறைய உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் இடத்தை அடையும் நோக்கத்திலும், தாமதமாக செல்வதை தவிர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதிய கால அட்டவணைப்படி சென்னை-மதுரை இடையே பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றின் பயண நேரம் 7 மணி 50 நிமிடங்களாக குறைக்கப்பட உள்ளது.



    தற்போது சென்னை-மதுரை இடையே 495 கி.மீ. தூரத்தை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணி 5 நிமிடங்களிலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணி 20 நிமிடங்களிலும் அடைகிறது.

    சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் 20 நிமிடங்கள் முன்னதாகவும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடங்கள் முன்னதாகவும் சென்றடையும் வகையில் வேகப்படுத்தப்படுகிறது. நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 5 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 7.50 மணிக்கும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.10 மணிக்கும் புறப்படும்.

    சென்னை-மதுரை இடையே இரட்டை பாதையுடன் மின்மயமாக்கல் முடிந்து சுமார் 15 மாதங்களுக்கு பிறகு ரெயில் நேரம் குறைய உள்ளது.

    Next Story
    ×