search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி ஆணையத்தை கலைத்துவிட்டு புதிய ஆணையம் அமைக்க வேண்டும் - காவிரி உரிமை மீட்புகுழு வலியுறுத்தல்
    X

    காவிரி ஆணையத்தை கலைத்துவிட்டு புதிய ஆணையம் அமைக்க வேண்டும் - காவிரி உரிமை மீட்புகுழு வலியுறுத்தல்

    காவிரி ஆணையத்தை கலைத்துவிட்டு புதிய ஆணையம் அமைக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புகுழு வலியுறுத்தி உள்ளது.

    தஞ்சாவூர்:

    காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுடெல்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையம் வழக்கம்போல் ஆசை வார்த்தை கூறி தமிழ்நாட்டை ஏமாற்றி விட்டது. கடந்த 28.05.2019 அன்று கூடிய மேலாண்மை ஆணையம், ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர், கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால் அந்த ஆணையை கர்நாடகம் செயல்படுத்தவில்லை.

    கர்நாடக அணை திறந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வரவில்லை. கர்நாடகத்தில் இருந்து காவிரியில் கலந்த சாக்கடை கழிவு நீரை கணக்கில் எடுத்து 1.8 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட்டதாக ஆணையம் கூறுகிறது.

    நேற்று நடந்த கூட்டத்தில், காவிரி ஆணைய தலைவர் மசூத் உசேன், ஜூன் மாதத்திற்குள் பாக்கி தண்ணீரையும் ஜூலை மாதத்திற்குரிய 31.3 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடகம், தமிழ்நாட்டிற்கு திறந்து விட ஆணையிட்டதாக கூறியுள்ளார். கடந்த கூட்டத்தில் அவர் இட்ட ஆணையை கர்நாடகம் செயல்படுத்தவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பருவமழை பெய்தால் கர்நாடகம் திறந்து விடும் என்று கூறியுள்ளார்.


    அதாவது தான் வெளியிட்ட ஆணை செயல்படுத்தப்படவில்லை என்ற சிறு கூச்சம் கூட இல்லாமல் ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விடும் என்று கூறுகிறார். தமிழ்நாட்டு மக்களை அந்த அளவுக்கு முட்டாள்களாக அவர் நினைக்கிறார்.

    இவ்வாறு தமிழர்களை தரக்குறைவாக மசூத் உசேன் நினைப்பதற்கு தமிழக அரசு இடம் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் சட்டப்படியான காவிரி நீரைப் பெறுவதில் உரிய அக்கறை காட்டாமல் ஒப்புக்குப் பேசி வருகின்றன என்ற உண்மையை இந்திய அரசும், காவிரி ஆணையமும் புரிந்து கொண்டுள்ளன.

    தமிழ்நாட்டு வேளாண்மைக்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரமும் காவிரி தான். எனவே இது விவசாயிகள் பிரச்சினை என்று சுருக்கி விடாமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு உயிர் பிரச்சினை என்பதை உணர்ந்து தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து போராடத் தேவை வந்துள்ளது.

    ஓய்வு நேரப்பணியாக மசூத் உசேன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு ஆகியவை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருகின்றன.

    எனவே இப்போது உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் கலைத்து விட்டு செயல்படுத்தும் அதிகாரமுள்ள முழுநேரப் பணியாக புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தையும், புதிய ஒழுங்காற்றுக்குழுவையும் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, மத்திய அரசைக் கோரவேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் இக்கோரிக்கையை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×