search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூரில் குடிநீர் வினியோக குளறுபடிகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
    X

    குன்னூரில் குடிநீர் வினியோக குளறுபடிகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை

    குன்னூரில் குடிநீர் வினியோக குளறுபடிகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்ட குடிநீர், மின்சாரம், சாலை வசதி கண்காணிப்பாளராக தொழில்துறை துணைத்தலைவர் நீரஜ் மிட்டல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர் கடந்த 2 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதா? என்று மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் நீராதாரங்களான ரேலியா அணை, ஜிம்கானா நீர்த்தேக்கம் ஆகியவற்றை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின்னர் குன்னூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குன்னூர் நகராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் பொதுமக்களுக்கு வினியோகிக்கும் குடிநீரின் தரம் பரிசோதிக்கப்பட்டது. அதில் குடிநீர் வினியோகத்தில் உள்ள குளறுபடியால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள் ளது. இதனை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் குழாய்கள் பழுதடைந்து உள்ளன. இதனால் குடிநீர் வினியோகத்தின்போது பெரும்பாலான தண்ணீர் வீணாகி விடுகிறது. பழைய குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் அமைக்க ரூ.54 லட்சம் ஒதுக்கப்படும். குடிநீரை சேமிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அடுத்த 15 நாட்களுக்குள் ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

    எங்கெங்கு நீராதாரங்கள் உள்ளதோ, அங்கெல்லாம் தடுப்பணை கட்டப்படும். தடுப்பணை கட்டவும், நீராதாரங்களை தூர்வாரவும் ரூ.5 கோடியே 42 லட்சம் ஒதுக்கப்படும். குன்னூர் ரேலியா அணையின் உயரத்தை அதிகரிக்க முடியாது. இதற்கு பதிலாக அதனருகில் புதிய தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். கற்பூர மரங்கள் நீலகிரி மாவட்ட நீராதாரங்களை அழிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அவற்றை முழுமையாக அகற்றினால் நிலச்சரிவு ஏற்படும் என புவியியல் துறையினர் அறிக்கை கொடுத்து உள்ளனர். எனவே சிறிது, சிறிதாக கற்பூர மரங்களை அகற்றப்பட்டு, பிற மரங்கள் நடவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது வருவாய் அதிகாரி செல்வராஜ், உதவி கலெக்டர் ரஞ்சித் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×