search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
    X

    மின்மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

    மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை நகராட்சி நிர்வாகம் வழங்கி உள்ளது. இவர்களுக்கு கடந்த காலங்களில் வைகை அணையிலிருந்து கிடைக்க பெற்ற குடிநீரையும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்க பெற்ற தண்ணீரையும் கொண்டு வார்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் விநியோகம் செய்யப்பட்டது.

    கடும் வறட்சியின் காரணமாக வைகை அணையில் இருந்து கிடைக்க பெற்ற குடிநீர் முற்றிலும் தடைபட்டதால், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்க பெற்ற தண்ணீரை வைத்து அனைத்து பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதாக புகார்கள் வருகின்றன.

    இது குறித்து நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் என்ற அண்ணாமலை கூறுகையில், மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். இதனால் கடைசி பகுதிகளில் உள்ளவர்களுக்கு குடிநீர் முழுமையாக செல்வதில்லை. ஒரு பகுதிக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரத்திற்கு மேல் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டி உள்ளது. மின் மோட்டார் வைத்து குடிநீர் பிடிப்பதால் தேவைக்கு அதிகமாக ஓவ்வொரு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தரை மட்ட தொட்டிகளில் சேமிக்கின்றனர்.

    மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடிப்பது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின்படி மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு ரூ. 12,160-ம், வணிக நிறுவனங்களில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு ரூ. 18,640 அபராதம் விதிக்கப்படும்.

    இந்த தொகை செலுத்தப்பட்ட பின்னர் தான் மறு இணைப்பு வழங்கப்படும். மேலும் மேற்படி மின் மோட்டார் பொருத்தி குடிநீர் பிடிப்பவர்களை ஆய்வு செய்ய நகராட்சி பணியாளர்களை கொண்டு 6 குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்ற விபரம் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்றார்.

    கடந்த வாரம் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×