search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.ம.மு.க.வில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் நீக்கப்படுவார்- டி.டி.வி.தினகரன்
    X

    அ.ம.மு.க.வில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் நீக்கப்படுவார்- டி.டி.வி.தினகரன்

    அ.ம.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் நீக்கப்படுவார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. படுதோல்வியை சந்தித்தது. முக்கிய நிர்வாகிகள் கூட டெபாசிட் வாங்கவில்லை. இதனால் அ.ம.மு.க. நிர்வாகிகள் பலர், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர். 

    குறிப்பாக டி.டி.வி.தினகரனுக்கும், கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், தங்க தமிழ்செல்வன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. டி.டி.வி.தினகரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், தங்க தமிழ்செல்வன் பேசிய அந்த ஆடியோ கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கி உள்ளது.



    இதுபற்றி கேட்டபோது, கட்சியை பற்றி பேசியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட தங்க தமிழ் செல்வன், தன்னை பிடிக்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்கவேண்டியதுதானே? என்றார். 

    இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று தனது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னாள் எம்எல்ஏ கதிர்காமு உள்ளிட்ட தேனி மாவட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். 

    ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:- 

    திட்டமிட்டுதான் நிர்வாகிகளுடன் ஆலோசித்தேன், அவசர ஆலோசனை இல்லை. தங்க தமிழ்ச்செல்வனால் விஸ்வரூபம் எடுக்க முடியாது,  பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார். 

    அமமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் நீக்கப்படுவார். எனக்கு அறிவுரை கூற தங்க தமிழ்ச்செல்வன் யார்?, முடிவு செய்துவிட்டு பேசி வருகிறார்.  தங்க தமிழ்ச்செல்வனிடம் இனி விளக்கம் கேட்க முடியாது, விரைவில் புதிய கொள்கை பரப்பு செயலாளரை நியமிப்போம். 

    18 எம்.எல்.ஏ.க்களை நீக்கிய சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக எப்படி செயல்பட முடியும்? சபாநாயகருக்கு எதிரான திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரித்து வாக்களிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×